“பெர்க்காசா சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் நான் பாதிக்கபட்டவனாக்கப்பட்டேன்”

கம்போங் பாருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெர்க்காசா நடத்திய திறந்த இல்ல உபசரிப்புக்கு 50 பேரைக் கொண்டு வந்ததால் நான் “‘பாதிக்கபட்டவனாக்கப்பட்டேன்”.

சர்ச்சைக்கு இலக்காகி இருக்கும் மசீச செபூத்தே தொகுதிக் குழு உறுப்பினர் கொலின் தியூ எடுத்துள்ள நிலை அதுவாகும்.

மலாய் வலச்சாரி அரசு சாரா அமைப்பான  பெர்க்காசா அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்கிறது என்பது எனக்குத் தெரியும். அது வழக்கமான சீனப் புத்தாண்டு வருகையாக இருக்கும் என நான் நினைத்திருந்தேன். அந்த நிகழ்வு இந்த அளவுக்கு சர்ச்சைக்குரியதாக மாறும் என நான் எதிர்பார்க்கவே இல்லை என நேற்று தியூ கூறிக் கொண்டார்.

“யாரையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. என்னுடைய நடவடிக்கைகள் மக்களுடைய உணர்வுகளைக் காயப்படுத்தியிருந்தால் அதற்காக சீன சமூகத்திடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்,” என்றார் அவர்.

அந்த திறந்த இல்ல உபசரிப்பில் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, சீனப் பண்பாட்டில் ஈமச் சடங்குகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள வெள்ளை நிறத்திலான கடித உறைகளில் அங் பாவ் வழங்கியது பெரும் சர்ச்சை உருவாக்கியுள்ளது.

மசீச ஸ்ரீ தேசா கிளைத் தலைவருமான தியூ, அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தது குறித்து இணைய குடிமக்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். 

தியூ தமது உரையைத் தற்காத்தார்

தமது நடவடிக்கையை தற்காத்துப் பேசிய தியூ, மசீச உறுப்பினராக அல்லாமல் சமூக நல சங்கம் ஒன்றின் தலைவர் என்னும் முறையில் தாம் அந்த நிகழ்வில் கலந்து கொண்டதாகத் தெரிவித்தார்.

அந்த நிகழ்வின் போது அவர் ஏன் மேடைக்குச் சென்று பெர்க்காசாவைப் பாராட்டிப் பேசினார் என்றும் அவரிடம் வினவப்பட்டது.

அதற்குப் பதில் அளித்த தியூ, தாம் இப்ராஹிமின் உரையை அங்கிருந்த சீனர்களுக்காக மொழி பெயர்த்துக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தார்.

“நான் அதற்கு முன்னர் திறந்த இல்ல உபசரிப்பு ஒன்றில் கலந்து கொண்டேன். இப்ராஹிம் உரையாற்றிக் கொண்டிருந்த போது தான் நான் அங்கு வந்து சேர்ந்தேன். அந்த நிகழ்ச்சியின் அறிவிப்பாளர் திடீரென என்னை இப்ராஹிம் அலியின் உரையை மொழி பெயர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.’

‘நான் அவர் சொன்னதை அங்கீகரிக்கவில்லை. வெறும் மொழி பெயர்ப்பு மட்டும் செய்து கொண்டிருந்தேன்.”

தியூ முதலில் மலாய் மொழியிலும் அடுத்து அதனை கண்டனிஸ் மொழியிலும் திரும்பக் கூறியது சுட்டிக் காட்டப்பட்ட போது அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர் பெர்க்காசா என்பதால் அவசியம் எனக் கருதி அவ்வாறு செய்ததாக அவர் சொன்னார்.

‘நான் இப்ராஹிமை சந்தித்ததே இல்லை’

இப்ராஹிமை நேற்றுத்தான் முதன் முறையாக சந்தித்தாகவும் பெர்க்காசா தலைவர் பற்றிப் பத்திரிக்கைகளில் மூலம் மட்டுமே தெரியும் என்றும் தியூ மேலும் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இப்ராஹிம் நிகழ்ச்சி தனிப்பட்ட நோக்கத்தைக் கொண்டிருந்தால் அதற்காக தாம் சீன சமூகத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

அந்த வெள்ளை அங் பாவ் சம்பவத்தினால் தமது குடும்பம் கூட கடுமையான விமர்சனத்துக்கு இலக்காகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வெள்ளை அங் பாவ் குறித்துத் தாம் தனிப்பட்ட முறையில் வருத்தம் அடைந்துள்ளதாகவும் சீனப் பண்பாட்டை இப்ராஹிம் அறியாமல் இருப்பது தமக்கு ஆத்திரத்தை மூட்டியிருப்பதாகவும் தியூ சொன்னார்.

“ஒரே மலேசியா கோட்பாடு வெறும் சுலோகம் என்று கூறப்படுகின்ற வேளையில் இப்ராஹிம் அதற்கு நல்ல எடுத்துக் காட்டு ஆவார்.”
 
அந்த நிகழ்வில் பங்கு கொண்டதற்காக அவர் வருத்தப்படுகிறாரா என்றும் தியூ-விடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்: “இப்ராஹிம் அலி தனிப்பட்ட நோக்கத்துக்காக அதனை செய்திருந்தால் நான் வருத்தம் அடைகிறேன். நான் கண்டிக்கப்படுகிறேன். அந்தச் சம்பவத்தினால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்.”