அரசமைப்பு சட்ட வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி, தம்மைச் சங்கடப்படுத்தும் நோக்கத்தில்தான் தம் “பேராசிரியர்” பட்டம் மீட்டுக்கொள்ளப்படுவதாக யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா ஒரு பொது அறிவிப்பைச் செய்திருக்கிறது என்கிறார்.
“யுஐஏ-இன் போக்கை எண்ணி வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்.மற்றவர்களால் இயக்கப்படும் ஒரு கருவிபோல் அது செயல்படுவது தெளிவாக தெரிகிறது”, என்றாரவர்.
“பணி ஓய்வுபெற்ற பல பேராசியர்கள் ‘நிறைநிலை’ பட்டம் கொடுக்கப்படாவிட்டாலும் ‘பேராசிரியர்’ என்றே அழைக்கப்படுகிறார்கள். அவர்களின் அறிவாற்றல்மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு. அதனால்தான் அப்படி அழைக்கிறார்கள்”.
“யுஐஏ-இலிருந்து எத்தனையோ பேராசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ஆனால், யுஐஏ என்னைச் சாடுவதுபோல் வேறு எவரையும் சாடியதில்லை. யுஐஏ அம்னோவின் திட்டத்தைப் பின்பற்றி இவ்வாறு நடந்துகொள்கிறதா?”, என்றவர் வினசினார்.
“யுஐஏ பட்டத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். ஆனால், என் அறிவை எடுத்துச் செல்ல முடியாது.என் திறமை என்றென்றும் என்னிடம்தான் இருக்கும்.”
பேராசிரியர் பதவி வேண்டும் என்று தாம் என்றும் கேட்டதில்லைஎன்றாரவர்.
“மற்றவர்களைப் போல் பேராசிரியர் ஆவதற்கு நான் விண்ணப்பம் செய்துகொண்டதில்லை.2002-இல், யுஐஏதான் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.”
நாளை யுஇஏ-இலிருந்து வெளியேறும் அப்துல் அசீஸ், உத்துசான் மலேசியாவில் அவரது பேராசிரியர் பட்டம் திரும்பப் பெறப்படும் என்று யுஐஏ அறிவித்துள்ள செய்தியின் தொடர்பில் இவ்வாறு கருத்துரைத்தார்.
“அதிகாரப்பூர்வமற்ற ‘அரசியல் சட்ட வல்லுனர்’ பட்டம் உத்துசான் மலேசியா, பெரித்தா ஹரியான் போன்ற அம்னோ ஊடகங்கள் கொடுத்த பட்டம்தான். 2008-க்குப் பிறகு அவையே அப்பட்டம் பற்றிக் கேள்விகேட்கத் தொடங்கிவிட்டன”, என்று அப்துல் அசீஸ் கூறினார்.
அசீஸ் பாரியை ஒரு வேட்பாளராக பிகேஆர் அறிவித்தது
அடுத்த தேர்தலில் அசீஸ் பாரியை ஒரு வேட்பாளராகக் களமிறக்கப்போவதாக பிகேஆர் அறிவித்ததை அடுத்து யுஐஏ-இன் அறிக்கை இன்று வெளிவந்துள்ளது.
அசீஸ் பாரி, சாபாக் பெர்ணம் நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு வேட்பாளராகக் களம் இறக்கப்படுவார் என நடப்பில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.