ரவாங் பள்ளிவாசலில் பன்றித் தலை கண்டு பிடிக்கப்பட்டது

சிலாங்கூர் ரவாங், பத்து 18ல் உள்ள நுருல் அமான் பள்ளிவாசலின் நுழைவாயிலில் பன்றித் தலை ஒன்று இன்று காலை கண்டு பிடிக்கப்பட்டது.

முக்கிய நுழைவாயில் திறக்கப்பட்ட போது பள்ளிவாசல் குழு உறுப்பினர் ஒருவர் காலை 5 மணி வாக்கில் அதனைக் கண்டதாக  பிகேஆர் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் கான் பெய் நெய் கூறினார்.

உடனடியாக போலீசாருடன் தொடர்பு கொள்ளப்பட்டது. அவர்கள் காலை மணி 7.30 வாக்கில் அங்கு சென்றடைந்தனர். இரண்டு மணி நேரம் கழித்து அவர்கள் மேலும் விசாரணை செய்வதற்காக பன்றித் தலையுடன் அங்கிருந்து புறப்பட்டனர்.

அந்த போலீசார் ரவாங் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அந்த விவகாரத்தை குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்து வருகிறது என்றும் கான் தெரிவித்தார்.

சமய உணர்வுகளை காயப்படுத்தும், உணர்வுகளைத் தூண்டக் கூடிய அந்த நடவடிக்கையை கான் வன்மையாக கண்டித்தார். தேர்தல் எந்த நேரத்திலும் நடக்கலாம் என்பதால் அரசியல் நோக்கத்துடனும் அது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கருதுகிறார்.

அந்தப் பள்ளிவாசல் கடந்த 48 ஆண்டுகளாக அங்கு இருந்து வருவதால் அந்தச் சம்பவம் திடீரென நிகழ்ந்திருக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.

“பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. யாரோ ஒருவர் பிரச்னைகளை உருவாக்க முயலுகிறார்”, என்றார் அவர்.

போலீசார் தங்கள் விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளியை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்றும் கான் கேட்டுக் கொண்டார்.

ரோனி லியூ பள்ளிவாசலுக்கு வருகை அளித்தார்

அந்தப் பள்ளிவாசாலுக்கு சிலாங்கூர் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ரோனி லியூவும் வருகை அளித்தார்.

இன்றிரவு நிகழும் பள்ளிவாசல் குழுக் கூட்டத்தில் அவர் மாநில அரசாங்கத்தைப் பிரதிநிதிப்பார் என்றும் அவர் அறிவித்தார்.

கான் அந்தக் கூட்டம் பற்றி அறிக்கை வழங்குவதோடு பள்ளிவாசல் குழு விடுக்கும் எந்த வேண்டுகோளையும்  மாநில அரசுக்குத் தெரிவிப்பார் என்றும் லியூ கூறினார்.

அந்தச் சம்பவம் தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்டது எனச் சாடிய லியூ,  பள்ளிவாசல் குழு சம்பவத்தைத் தொடர்ந்து பரபரப்பு அடையாமல் அமைதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

அந்தச் சம்பவம் பற்றி ஆரூடமாக எதனையும் தெரிவிக்க மறுத்து விட்ட அவர், போலீசார் தங்கள் புலனாய்வை மேற்கொள்ள விட்டு விடுவது நல்லது எனக் கூறினார்.