“போலீசுக்குக் கையூட்டுக் கொடுக்கச் சொன்னதில்லை’’, என்எப்சி

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) நிர்வாகத் தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில், போலீசுக்குக் கையூட்டுக் கொடுக்குமாறு ஒரு வணிகரான ஷாம்சுபாஹ்ரினிடம் தாம் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுவதை மறுத்தார்.

இன்று நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சில் வெளிவந்திருந்த ஒரு செய்தியில் சாலே, போலீசார் அரசாங்கக் கடன்மீதான விசாரணையில் நியாயமாகவே நடந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்குக் கையூட்டக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியிருந்தார்.

“போலீசாரைப் பொருத்தவரை அவர்களுடன் பிரச்னை ஏற்பட்டதில்லை. அவர்களுக்குக் கையூட்டு வழங்க எக்காரணமுமில்லை”, என்றவர் கூறியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஷாம்சுபஹ்ரின், தாம் என்எப்சி  ஆலோசகராக நியமிக்கப்பட்ட பின்னர், அந்நிறுவனத்தின் மோசடியை மூடிமறைக்க போலீசுக்குக் கையூட்டு வழங்க சாலே தமக்கு நெருக்குதல் கொடுத்தார் என்று போலீசில் புகார் செய்துள்ளார். அப்புகாரை பிகேஆர் நேற்று வெளியிட்டிருந்தது.

ஆனால், சாலே அதை மறுத்தார். ஊடகத் தொடர்புக்காக மட்டுமே ஷாம்சுபாஹ்ரினை அமர்த்தியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

“ஊடகங்களில் எங்களுக்கு எதிராக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. மாற்றரசுக் கட்சியினரும் எங்களைத் தாக்கி வந்தனர். அதற்காகத்தான் ஷாம்சுபாஹ்ரினை வேலைக்கு அமர்த்தினோம்”, என்றவர் கூறினார்.

ஷம்சுபாஹ்ரின் (இடம்)மீது, ஆலோசனைக் கட்டணம் என்று கூறி ரிம2மில்லியனை சாலேயிடம் ஏமாற்றிப் பெற்றார் என்று டிசம்பர் 30-இல் குற்றம்சாட்டப்பட்டது. ஜனவரி 19-இல் பிணையில் வெளிவந்த அவர், மறுபடியும் கைது செய்யப்பட்டு மேலும்  இரு குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன.

ஷம்சுபஹ்ரின் ஒரு பலிகடா ஆக்கப்படுவதாகக் கூறப்படுவதை மறுத்த சாலே அவர் தம்மை ஏமாற்றினார் என்பதுதான் உண்மை என்றார்.

“எங்களுக்காக வேலை செய்ய முன்வந்த அவர், எந்தவொரு வேலையையும் செய்யாமலேயே, ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே பணம் கேட்டுத் தொல்லைப்படுத்தினார்”, என்று சாலே கூறினார்.

அவர் பணம் கேட்டுத் தொல்லைப்படுத்தியதற்கு அவர் அனுப்பிய குறுஞ்செய்திகளே சான்றாகும் என்றாரவர்.

TAGS: