மகாதீர் அன்வாரை யூத ஆதரவாளர் எனச் சொல்வது வினோதமாக இருக்கிறது

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் யூதர்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் எதிராக கடைப் பிடிக்கும் நிலை, அவர் அதிகாரத்தில் இருந்த போது அவர்களுடன் அணுக்கமாக இருந்ததற்கு நேர்மாறாக உள்ளது என பிகேஆர் இன்று கூறியுள்ளது.

“யூதர்களுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் எதிராக இப்போது மகாதீர் வெளிப்படையாகப் பேசலாம். ஆனால் அவர் கடந்த காலத்தில் அவர்களுடன் உண்மையில் அணுக்கமான உறவுகளை வைத்திருந்தார். மகாதீர் 1984ம் ஆண்டு அமெரிக்கவுடன் இரகசியமாக இராணுவ ஒப்பந்தத்தையும் செய்து கொண்டார்.  இருவழி பயிற்சி ஆலோசனை ஒப்பந்தம் என்ற அந்த ஒப்பந்தம் அமெரிக்கர்கள் மலேசியாவில் இராணுவப் பயிற்சியை நடத்துவதற்கு அனுமதித்தது,” என பிகேஆர் கட்சியின் நிக் நஸாமி நிக் அகமட் கூறினார்.

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் “யூதர்களுக்கு ஆதரவானவர்” என்றும் ஒர் யூதரான முன்னாள் உலக வங்கித் தலைவர் பால் உல்போவிட்ஸுடன் அணுக்கமான உறவுகளை வைத்திருந்தார் என்றும் நேற்று மகாதீர் குற்றம் சாட்டியதற்கு பிகேஆர் தொடர்புப் பிரிவு இயக்குநருமான நிக் நஸாமி பதில் அளித்தார்.

மகாதீர் அன்வாரை நீக்கியதால் வெளிநாடுகளில் மாசு படிந்து விட்ட மலேசியாவின் தோற்றத்தை சரி செய்யும் பொருட்டு முன்னைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்-ஷை சந்திப்பதற்கு கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதற்கு யூத ஆதரவாளரான ஜாக் அப்ராமோப்-புக்கு மகாதீர் 1.2 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்ததாக கூறப்பட்டது.

“அந்த உண்மையை மகாதீரே ஒப்புக் கொண்டுள்ளார்,” என நிக் நஸாமி ஒர் அறிக்கையில் தெரிவித்தார். அப்ராமோப் புஷ்-ஷுக்கும் அணுக்கமானவர். இஸ்ரேலில் உள்ள தீவிரவாதக் கும்பல் ஒன்றுடனும் தொடர்பு வைத்திருந்தார்.

“அப்ராமோப் நடவடிக்கைகள் மூலம் திரட்டப்படும் பணம் பாலஸ்தீன நாட்டை எதிர்க்கும் யூதக் குடியிருப்பாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது என நியூஸ்வீக சஞ்சிகை கூறியுள்ளது.”

“அந்த சந்திப்புக்குப் பின்னர் புஷ், பயங்கரவாதத்துக்கு எதிரான தமது போரில் மலேசியாவை தோழமை நாடு என கருதத் தொடங்கினார். பயங்கரவாதிகள் எனக் கூறப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட யாரையும் இசா சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு  மலேசியா அந்தக் காரணத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியது,” என்றார் நிக் நஸாமி.

அன்வாரை பழி வாங்குவதற்காக மகாதீர் இவ்வாறு செய்வதாகக் கூறிய அவர், பிகேஆர் மூத்த தலைவருக்கு எதிராக அவரும் அம்னோவும் அவதூறாக கூறிவருவதாகத் தெரிவித்தார்.

வால் ஸ்டீரிட் சஞ்சிகைக்கு அன்வார் கடந்த வியாழக்கிழமை வழங்கிய பேட்டியைத் தொடர்ந்து சர்ச்சை மூண்டுள்ளது. அந்தப் பேட்டியில் அன்வார், இஸ்ரேலுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகளைத் தாம் ஆதரிப்பதாகவும் ஆனால் அது பாலஸ்தீன அவாக்களை மதிக்க அந்த யூத நாடு விருப்பம் தெரிவிப்பதைப் பொறுத்து அந்த நாட்டுடனான உறவுகள் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

அந்தப் பேட்டியை கையில் எடுத்துக் கொண்ட துணைப் பிரதமர் முஹைடின் யாசின், அன்வாரும் பக்கத்தானும் இஸ்ரேலுக்கு ஆதரவானவர்கள் எனச் சாடினார்.

“வால் ஸ்டீரிட் சஞ்சிகைக்கு தாம் வழங்கிய அறிக்கையை அம்னோவும் அதன் ஊடகங்களும் திரித்து விட்டதாக அன்வார் விளக்கியுள்ளார். அவையும்  (அம்னோ) இரண்டு நாட்டுத் தீர்வை ஆதரித்துள்ளன. அந்தத் தீர்வை அரபு அமைதி முயற்சியின் போதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மலேசியாவும் ஏன் ஹமாஸும் பாலஸ்தீனப் போராளிகளும் கூட அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்”, என்றும் நிக் நஸாமி வலியுறுத்தினார்.