கிளந்தானில் இரண்டு இடங்களில் போட்டியிட பிபிபி விருப்பம்

அடுத்த பொதுத் தேர்தலில் கிளந்தானில் தனக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று மக்கள் முற்போக்குக் கட்சி(பிபிபி)  விரும்புகிறது.

பிபிபி உதவித் தலைவர் நிக் சாபியா நிக் யூசுப், கிளந்தானில் பிபிபி-க்கு நிறைய செல்வாக்கு இருப்பதாகவும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வெல்லும் ஆற்றல் அதற்குண்டு என்றும் கூறினார்.

“பிபிபி கிளந்தானில் போட்டியிட விரும்புகிறது. கோலா கிரய் போன்ற இடங்களில் அக்கட்சிக்கு வெற்றிபெறும் ஆற்றல் உண்டு”, என்றவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார். 

கிளந்தானை பிஎன் கைப்பற்ற அடுத்த பொதுத் தேர்தல்  நல்ல வாய்ப்பை வழங்குவதாக கிளந்தான் பிபிபி தலைவரான நிக் சாபியா கூறினார். ஆனால், அதற்கு எல்லாத் தரப்பினரும் ஒன்றுசேர்ந்து பாடுபட வேண்டும்.

அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட் தலைமையில் கிளந்தான் பிஎன் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் வெற்றி பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.

மற்ற சில தலைவர்கள் முடிவுசெய்துள்ளதைப்போல் கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட்டும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றும் நிக் சாபியா கேட்டுக்கொண்டார்.

-பெர்னாமா