வாழ்த்து பாஸுக்கு, வசவு பெர்காசாவுக்கு.
மலாய் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா, ‘வெள்ளை அங் பாவ்’ பொட்டலங்களைக் கொடுத்ததற்காக பல தரப்புகளின் கண்டனத்துக்கு இலக்காகியுள்ள வேளையில் சீனர்களின் பண்பாட்டுக்கு மதிப்பளித்து சீனப் புத்தாண்டைக் கொண்டாடிய பாஸ் கட்சி, ஃபேஸ்புக்கில் பலருடைய பாராட்டைப் பெற்றுள்ளது.
மாற்றரசுக் கட்சியான பாஸின் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களைக் காண்பிக்கும் படங்கள் சில ஃபேஸ்புக்கில் இடம்பெற்றுள்ளன.ஒரு படம் ஜோகூர், மெர்சிங்கைச் சேர்ந்த அடிநிலைத் தலைவர் ஒருவர் பன்றிஇறைச்சி விற்பனை செய்யும் ஒரு வியாபாரிக்கு அங் பாவ் கொடுப்பதைக் காண்பிக்கிறது.
மற்ற படங்கள்,சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரான பாஸைச் சேர்ந்த இஸ்கண்டார் சமட், பன்றிஇறைச்சி விற்பனை செய்யும் கடையின்முன் அங் பாவ் பொட்டலங்களை விநியோகம் செய்வதையும் பெர்லிஸ் பாஸ் ஏற்பாடு செய்திருந்த திறந்த இல்ல உபசரிப்பில் இடம்பெற்ற “பச்சைநிற சிங்க”நடனத்தையும் காண்பிக்கின்றன. (பச்சை, பாஸ் கட்சியின் அடையாள நிறமாகும்)
ஃபேஸ்புக் பயனர்கள், பாஸ், பெர்காசா ஆகிய இரண்டும் சீனப் புத்தாண்டைக் கொண்டாடிய விதத்தை ஒப்பிட்டு திறந்த மனத்துடனும் சீனர் பண்பாட்டுக்கு ஏற்பவும் நடந்துகொண்ட பாஸைப் புகழ்ந்து பாராட்டியுள்ளன.
“மசீச இதைப் பார்க்க விரும்பாது. பார்த்தால், அதன் பின்னர் இஸ்லாமிய நாடு என்று அது கூறுவதெல்லாம் எடுபடாமல் போய்விடும்”, என்று ஃபேஸ்புக்கில் டெனிஸ் ஈ குறிப்பிட்டிருந்தார்.
“மெர்சிங் தொகுதித் தலைவரும் (ரோஸ்லான் மாமாட்) செம்பாகா சட்டமன்ற உறுப்பினரும்(இஸ்கண்டர் சமட்) பன்றி இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிக்குச் சீனப் புத்தாண்டு வாழ்த்து சொல்கிறார்கள், அங் பாவ் வழங்குகிறார்கள்.ஆனால், ‘வெள்ளைநிறத்தில் அங் பாவ்’ வழங்கவில்லை”, என்றவர் கூறியிருந்தார்.
சீனர்கள் பன்றி இறைச்சி உண்பதில் பிரச்னை இல்லை
மலேசியாகினி, ரோஸ்லான் மாமாட்டைத் தொடர்புகொண்டு பேசியபோது அவர், தமது படம் இணையத்தில் இடம்பெற்றிருப்பது அறிந்து வியப்புத் தெரிவித்தார்.பாராட்டிய ஃபேஸ்புக் பயனர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
51-வயது நிரம்பிய வணிகரான அவர், அந்தப் படம் தாமும் மற்ற பக்காத்தான் தலைவர்களும் சீனப் புத்தாண்டுக்கு இரண்டு நாள் முன்னதாக அங் பாவ்களையும் சீனப் புத்தாண்டு வாழ்த்து அட்டைகளையும் வழங்கியபோது எடுக்கப்பட்டது என்றார்.
பன்றி இறைச்சி வியாபாரியை முஸ்லிம்களில் சிலர் கருதுவதுபோல் “ஹலால்” அல்லாதவர் என்று கருதி அவர் ஏன் ஒதுங்கிச் செல்லவில்லை என்று கேட்டதற்கு முஸ்லிம்-அல்லாதார் பன்றி-இறைச்சி உண்பதை இஸ்லாம் தடை செய்ததில்லை என்று ரோஸ்லான் விளக்கமளித்தார்.
“முஸ்லிம்கள்தாம் பன்றி உண்ணக்கூடாது. சீனர்கள் பன்றி உண்பது எங்களுக்குப் பிரச்னை இல்லை. அவர்களின் பண்பாட்டை மதிக்க வேண்டும். உரிமைகளை மதிக்க வேண்டும்.
“அம்னோ, மசீச கட்சியினர்தாம் உண்மைகளைத் திரித்து, பாஸ் ஆட்சிக்கு வந்தால் சீனர்கள் பன்றி தின்ன அனுமதிக்காது என்று கூறுவார்கள்”, என்று ரோஸ்லான் கூறினார்.
இந்த ஆண்டில் பக்காத்தான் கட்சிகள் சீனப் புத்தாண்டு நிகழ்வுகளை ஒன்றுசேர்ந்து நடத்தியதாக அவர் தெரிவித்தார். என்றாலும், பாஸ் தலைவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே சீனர் சமூகத்தைச் சந்தித்து வாழ்த்துக் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
பெர்லிசில் பச்சைநிற சிங்க நடனம்
இதனிடையே, பெர்லிஸ் பாஸ் தலைவர் ஹஷிம் ஜாசின், தாங்கள் ‘பச்சை சிங்க’நடனத்துக்கு ஏற்பாடு செய்வது இது முதல்முறையல்ல என்றார்.
கடந்த இரண்டு,மூன்றாண்டுகளாகவே கட்சியின் விருந்து நிகழ்வுகள் சிலவற்றில் சிங்க நடனம் நடத்தப்பட்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், சீனப்புத்தாண்டு உபசரிப்பை நடத்தி அதில் ‘பச்சை சிங்க’ நடனத்தை ஏற்பாடு செய்தது இதுவே முதல்முறையாகும்.
அந்தப் ‘பச்சை சிங்க’நடனக் குழு கெடாவிலிருந்து அழைத்து வரப்பட்டதாக தெரிகிறது.
ஏன்,அவர்கள் சிங்க நடனத்துகு ஏற்பாடு செய்தார்கள் என்று வினவியதற்கு, பல-இனக் கலாச்சார நிகழ்வுகள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கிளந்தான் பாஸ் அரசின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதாகக் ஹஷிம் கூறினார்.
“சீனர்களுக்கு மட்டுமல்ல, மலாய்க்காரர்களுக்கும் சிங்க நடனம் பிடிக்கும்.அது கவர்ச்சிகரமானது”, என்றார்.
சீனர்களின் ஆதரவைப் பெறத்தான் இப்படியெல்லாம் செய்யப்படுகிறதா என்று கேட்டதற்கு,பாஸ் ஆட்சிக்கு வந்தால், “சீனர்களின் கை, கால்களை வெட்டும்” என்று அம்னோ பிரச்சாரம் செய்வதற்கு மாறாக, பாஸ் எப்படி மற்ற இனங்களுடன் இரண்டறக் கலந்து பழகுகிறது என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுவதாக அவர் கூறினார்.