சிலாங்கூர் ரவாங் நுருல் இமான் பள்ளிவாசல் நுழைவாயிலில் பன்றித் தலை வைக்கப்பட்ட சம்பவத்தை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கடுமையாகச் சாடியுள்ளார்.
அது, வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக “இன சமய உணர்வுகளைத் தூண்டி விடும் நோக்கத்தைக் கொண்ட கோழைத்தனமான நடவடிக்கை” என டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் வருணித்தார்.
மலேசியாவில் “அத்தகைய வெறுக்கத்தக்க நடவடிக்கைகளுக்கு இடம் இல்லை என்பதால் டிஏபி அந்தச் சம்பவத்தை கடுமையாகக் கண்டிக்கிறது,” என லிம் விடுத்த அறிக்கை கூறியது.
“என்றாலும் அந்தக் காரியத்தை செய்தவர்கள் தங்கள் தீய நோக்கங்களிம் வெற்றி அடைய மாட்டார்கள். காரணம் மலேசியர்கள் நமது சமுதாயத்தில் உள்ள பண்பாட்டு சமய வேறுபாடுகளுடன் வாழக் கற்றுக் கொண்டுள்ளதுடன் அவற்றை கொண்டாடவும் பழகிக் கொண்டு விட்டனர்,” என்றார் அவர்.
“நாம் பல தசாப்தங்களாக அனுபவித்து வரும் அமைதி, தீவிரவாதிகள் மற்றும் வெறி பிடித்தவர்களின் இத்தகைய கோழைத்தனமான நடவடிக்கைகளினால் சீர்குலைய அனுமதிக்க மாட்டோம்.”
“அந்த நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது”
அந்தப் பள்ளிவாசலின் முக்கிய நுழைவாயில் அதிகாலை 5 மணி வாக்கில் திறக்கப்பட்ட போது பன்றித் தலையை பள்ளிவாசல் குழு உறுப்பினர் ஒருவர் கண்டு பிடித்ததாக பிகேஆர் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் கான் பெய் நெய் கூறினார். அந்த நடவடிக்கை அரசியல் நோக்கம் கொண்டது என்றும் அவர் வருணித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 295வது பிரிவின் கீழ் போலீஸ் அந்த விவகாரத்தைப் புலனாய்வு செய்து வருவதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் அப்துல்லா கூறினார்.
சமயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் வழிபாட்டு இடங்களை மாசுபடுத்துவது சம்பந்தமானது அந்தப் பிரிவாகும்
பள்ளிவாசலாக இருந்தாலும் தேவாலயமாக இருந்தாலும் கோயிலாக இருந்தாலும் அவற்றை மாசுபடுத்தும் எந்த நடவடிக்கையையும் கண்டிப்பதில் அனைத்துத் தரப்புக்களும் ஒன்று சேர வேண்டும் என்றும் லிம் கேட்டுக் கொண்டார்.
குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.