நேற்று பாங்கியில் சுமார் 1,000 பேர் கூடியிருந்த கூட்டத்தில் பேசிய சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹசான் அலி பக்கத்தான் ரக்யாட் எப்படி இஸ்லாத்தை மிரட்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அவரது நாடுதழுவிய அளவில் கூட்டம் நடத்தும் திட்டத்தின் முதல் கட்டமான இக்கூட்டத்தில் டிஎபி கூடிய விரைவில் மலேசியாவை சிங்கப்பூருடன் இணைத்து ஒரு குடியரசை உருவாக்கும் என்றார்.
“அவர்கள் புத்ராஜெயாவை கைப்பற்றியவுடன் டிஎபி என்ன செய்யும் என்று எண்ணிப் பாருங்கள். அவர்கள் மலேசியாவை சிங்கப்பூருடன் இணைத்து விட்டு பிஎபியுடன் சேர்ந்துக்கொள்வர்”, என்று ஹசான் கூறினார்.
இன்னொரு உணர்ச்சிகரமான கூறையும் அவர் தொட்டுப் பேசினார். டிஎபி “நிச்சயமாக” மலாய்க்காரர்களின் சிறப்புத் தகுதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 153 ஐ அகற்றிவிடுவதோடு இஸ்லாமிய சட்டங்களும் நீக்கப்படும் என்றார்.
இவற்றை எல்லாம் தடுப்பதற்கான ஒரே வழி அவரது ஜாத்தி என்ற “மூன்றாவது சக்தி”க்கு ஆதரவு அளிப்பத்துதான். அந்த அமைப்பு இஸ்லாம், மலாய்க்காரர்கள் மற்றும் வலுவான அரண்மனை அமைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி வருகிறது.
“நாட்டை ஒரு குடியரசாக மாற்றுவதற்கு நாடாளுமன்றம் ஒப்புக்கொண்டாலும், அதற்கு ஆட்சியாளர்களின் சம்மதம் தேவைப்படுகிறது. ஆட்சியாளர்கள் பெரும்பாலான நமது உரிமைகளின் பாதுகாவலர்கள். ஆகவே, ஐஎம்ஆர் (IMR) தொடர்வதற்கான ஆதரவை அளிப்போம்”, என்று அவர் கூறியதைத் தொடர்ந்து கூட்டத்தினர் I-Islam, M-Malay, R-Royal Institution) என்று ஓதினர்.