“பொதுவாக மலேசியர்களைப் பொறுத்த வரையில் நாம் ஒருவர் மற்றொருவருடைய நம்பிக்கைகளை மதிக்கிறோம். ஆனால் பெர்க்காசாவைப் பொறுத்த மட்டில் அது ஒரு வழிப் பாதை.”
வெள்ளை அங் பாவ்: அரசாங்கம் தவறி விட்டது
கர்மா: கீ துவான் சாய் ‘நான் அவர்களை நிறுத்த முடியாது’ என பிரதமர் நஜிப் ரசாக் அறிக்கை விடுத்த பின்னரே நாடு முழுவதும் தேவலாயங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டதை மறக்க வேண்டாம்.
பெர்க்காசா போன்ற போக்கிரிகளைச் சேர்ப்பது உட்பட என்ன விலை கொடுத்தாவது புத்ராஜெயாவைத் தற்காக்க பிஎன் வேலை செய்து வருவது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஆனால் வழக்கம் போல தனது மூத்த சகோதரரான அம்னோவின் வியூகத்தை செயல்படுத்த மசீச நியமிக்கப்படுவதால் அந்தக் கட்சி இறுதியில் முட்டாளாகி விடுகிறது. அதன் பரம எதிரியான கெரக்கான் இப்போது புன்னகை செய்து கொண்டிருக்கிறது.
ஸ்விபெண்டர்: மரியாதை என்பது இரு வழியாகும். பொதுவாக மலேசியர்களைப் பொறுத்த வரையில் நாம் ஒருவர் மற்றொருவருடைய நம்பிக்கைகளை மதிக்கிறோம். ஆனால் பெர்க்காசாவைப் பொறுத்த மட்டில் அது ஒரு வழிப் பாதையாகும்.
மலேசியா சக்கிட்: அரசாங்கம் நம்மை பல வழிகளில் ஏமாற்றி விட்டது. சக மலேசியர்களை மதிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மலேசியர்களிடையே தோற்றுவிப்பதில் நமது கல்வி முறை தோல்வி கண்டு விட்டது.
அதற்கு மாறாக பிடிஎன் பாணியிலான பயிற்சி முகாம்கள் வழியாகவும் சமயப் போதனைகள் வழியாகவும் மலாய் மேலாண்மை சிந்தனைகள் புகுத்தப்பட்டன. பாஹாசா மிலாயுவில் புலமை பெறுவதை சோதனையாகக் கொண்ட குடியியல் பாடங்கள் போன்றவற்றை கற்குமாறு மலாய்க்காரர் அல்லாதார் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இன்றைய மோசமான இன உறவுகள் நிலைக்கு பிஎன் அரசாங்கம் கடந்த 30 முதல் 40 ஆண்டுகளாக செய்து வந்த அதிகார அத்துமீறல்களே காரணம். நான் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளேன். அங்கு பெரும்பான்மையாக உள்ள மலாய் ஊழியர்கள் தங்கள் சீன சகாக்களை அவமரியாதையாக நடத்துவதை நான் பார்த்துள்ளேன்.
பரந்த சிந்தனையைக் கொண்ட மலாய்க்காரர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அவர்கள் தாங்கள் ஒதுக்கப்படுவோம் என அஞ்சி வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்றனர். நான் இப்போது வெளிநாடு ஒன்றில் வேலை செய்கிறேன். அங்கு ஒர் இனத்தைச் சார்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதனால் நான் சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவன் என்னும் உணர்வைப் பெற வேண்டும். ஆனால் எனக்கு அந்த உணர்வு எழவே இல்லை. மலேசிய சமுதாயம் ஆழமாக பிளவுபட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
நாடோடி: சீனர் ஒருவர் விருந்துக்கு ஏற்பாடு செய்து அதில் ஒரு முஸ்லிம் மட்டும் கலந்து கொள்வதாக இருந்தால் தமது விருந்தினருடைய மேசையில் வழங்கப்படும் உணவு வகைகள் அந்த முஸ்லிம் விருந்தினருடைய உணர்வுகளைக் காயப்படுத்தாமல் இருப்பதை அவர் உறுதி செய்வார். சில சமயங்களில் முஸ்லிம் அல்லாதாருக்கு சுவையானது எனக் கருதப்படும் உணவு வகைகள் கூடத் தியாகம் செய்யப்பட்டிருக்கும்.
வலச்சாரி அமைப்பான பெர்க்காசா சீனப் புத்தாண்டு போன்ற சிறப்புடைய நாளில் கொண்டாட்டங்களை நடத்துவதற்கு முன்னர் சீனப் பண்பாட்டையும் பாரம்பரியங்களையும் ஒரளவு அறிந்து கொள்ள முதலில் முயற்சி செய்திருக்க வேண்டும்.
பெர்க்காசாவுக்கு கெட்ட நோக்கம் ஏதும் இல்லை என்றால் அது அதனை ஒழுங்காகச் செய்ய வேண்டும், இல்லாவிட்டால் அறவே செய்ய வேண்டாம்.
அடையாளம் இல்லாதவன்_5fb: உண்மையில் அங் பாவ், ஹொக்கியான் மொழியில்- ‘அங்’ என்றால் சிவப்பு, ‘பாவ்’ என்றால் உறை என அர்த்தம். ஆகவே ‘வெள்ளை’ அங் பாவ் என்பதே கிடையாது.
இப்ராஹிம் அலியும் பெர்க்காசாவும் தனிமையில் வாழ்ந்து கொண்டு சீனர்களுடன் பழகாமல் இருந்தால் தவிர தங்களுக்குத் தெரியாது என அவர்கள் மன்றாடுவதை மன்னிக்கவே முடியாது. அது அவர்களுடைய அகங்காரத்தைக் காட்டுகிறது.
அவர்கள் தங்களை மலாய்க்காரர்கள் எனச் சொல்லிக் கொள்வதற்கே வெட்கப்பட வேண்டும். நல்ல வேளையாக என்னைச் சுற்றியுள்ள மலாய்க்காரர்கள் இப்ராஹிம் அலியைப் போன்று இல்லை.
குரல்: மசீச பெர்க்காசா தலைவர்களுக்கு இடையில் வாக்குவாதம் நிகழ்ந்தாலும் அவர்கள் உள்ளுக்குள் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர் என்பதை அது தெளிவாக உணர்த்துகிறது.