செந்தூல் பள்ளிவாசலில் பன்றித் தலை கண்டெடுக்கப்பட்டது!

கோலாலம்பூர் செந்தூலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பன்றித் தலை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் பள்ளிவாசல் ஒன்றில் பன்றித் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது இது இரண்டாவது முறையாகும்.

அது மஸ்ஜித் ஹிடாயாட் செந்தூலில் வைக்கப்பட்டிருந்ததாக பத்து எம்பி தியான் சுவா கூறினார்.

“சில கேடு கெட்ட போக்கிரிகள் பன்றித் தலையை மஸ்ஜித் ஹிடாயாட் செந்தூலில் வைத்துள்ளனர். என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். நெருப்புடன் விளையாடுவது யாராக இருந்தாலும் நாங்கள் அவர்களுக்கு பெரும் வேதனையைக் கொடுக்கப் போகிறோம் !” என அவர் இன்று காலை தமது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

தொடர்பு கொள்ளப்பட்ட போது சுவா, தாம் தற்போது அந்த விவகாரம் மீது பள்ளிவாசல் குழுவுடன் கூட்டம் நடத்திக் கொண்டிருப்பதாகவும் விரைவில் மேலும் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

ஜனவரி 31ம் தேதி ரவாங்கில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிலும் அது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வைகறை தொழுகைக்கு முன்னர் பள்ளிவாசல் குழு உறுப்பினர் ஒருவர் பன்றித் தலையைக் கண்டு பிடித்தார்.

வழிபாட்டு இடங்களை மாசுபடுத்தும் விவகாரங்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் சட்டத்தி 295வது பிரிவின் கீழ் போலீஸ் அந்த விஷயத்தை விசாரித்து வருகின்றது.