ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார், லண்டனுக்கு மேற்கொண்ட ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியிருக்கிறார்.
தாம் பிரிட்டிஷ் தலைநகரில் காலமாகி விட்டதாக வெளியான வதந்திகளை அவர் முறியடித்துள்ளார்.
செப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பிரமுகர்கள் அறையில் அவருக்காக காத்திருந்த நிருபர்களுடன் ஆரோக்கியமாகவும் கலகலப்பாகவும் காணப்பட்ட அவர் வாழத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன் கைகுலுக்கவும் செய்தார்.
அவர் மலேசிய விமான நிறுவன (எம்ஏஎஸ்) விமானம் வழியாக இன்று காலை எட்டு மணிக்கு கோலாலம்பூர் வந்து சேர்ந்தார்.
“எனக்கு எதுவும் நடக்கவில்லை. தாயகம் திரும்பியதற்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன்,” என அவர் நிருபர்களிடம் கூறினார்.
விமான நிலையத்தில் இஸ்மாயிலை துணை ஐஜிபி காலித் அபு பாக்காரும் பல முதுநிலை போலீஸ் அதிகாரிகளும் வரவேற்றார்கள்.
கடந்த திங்கட்கிழமை முகநூல் வழியாகவும் குறுஞ்செய்தி வழியாகவும் லண்டனில் இஸ்மாயில் காலமாகி விட்டதாக தகவல்கள் பரவத் தொடங்கியதும் அவற்றை மறுத்து அரச மலேசியப் போலீஸ் படை அறிக்கை வெளியிட்டது.
தமக்கு எதிராக இனிமேல் அவதூறு ஏதும் கிளப்பப்பட மாட்டாது என இஸ்மாயில் நம்பிக்கை தெரிவித்தார். காரணம் அத்தகைய அவதூறுகளினால் யாருக்கும் நன்மை இல்லை என்றார் அவர்.
தமது லண்டன் பயணத்தின் போது போலீஸ் பணிகள் குறித்து நிறைய அனுபவத்தைப் பெற்றதாகக் குறிப்பிட்ட ஐஜிபி, மலேசியப் போலீசாருடன் அதனைப் பகிர்ந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.
லண்டன் பெருநகர்ப் போலீஸ் பிரிவுடன் அவர் பேச்சு நடத்தினார். அவர் பல போலீஸ் கண்காட்சிகளுக்கு வருகை புரிந்தார். லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும் பார்வையிட்டார். பிரிட்டிஷ் போலீசார் பயன்படுத்துகின்ற அதி நவீன சாதனங்களையும் அவர் அறிந்து கொண்டார்.
“ஒருவருடைய அனுபவத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு அது நல்ல வாய்ப்பாக அமைந்திருந்தது,” என்றார் அவர்.
இதனிடையே அந்த வதந்திகள் பரப்பப்பட்டதின் தொடர்பில் இருவரிடமிருந்து (பினாங்கில் ஒருவர்- ஈப்போவில் ஒருவர்) போலீஸ் தகவலைப் பெற்றுள்ளதாக காலித் கூறினார்.
“போலீஸ் அந்த குறுஞ்செய்தியின் ஆதாரத்தை இன்னும் தேடி வருவதால் நான் அதிகமாகச் சொல்ல முடியாது,” என அவர் சொன்னார். அந்த இருவரும் கைது செய்யப்படவில்லை என்றும் காலித் தெரிவித்தார்.
பெர்னாமா