கிளந்தான் அம்னோ கூட்டங்களில் கலந்துகொள்ளாதது ஏன்? தெங்கு ரசாலி விளக்கம்

குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சா, கிளந்தான் அம்னோ தொடர்புக்குழுக் கூட்டங்களில் தாம் கலந்துகொள்ளாததை வைத்து தாம் அக்கூட்டங்களைப் புறக்கணிப்பதாக தப்பாக பொருள் கொண்டுவிடக் கூடாது என்கிறார்.

அக்கூட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது என்ற எண்ணம் தமக்கு இருந்ததில்லை என்று குவாங் மூசா அம்னோ தலைவருமான அவர் கூறினார்.

“சில வேளைகளில் கூட்டங்களுக்கான அழைப்பு ஒருநாள் பிந்திக் கிடைக்கும், அல்லது முதல்நாள் வந்து கிடைக்கும். அதனால் கலந்துகொள்ள முடியாமல் போகிறது.” இன்று கோத்தா பாருவில் அக்குழு, துணைப் பிரதமர் முகைதின் யாசினுடன் நடத்திய இரகசிய கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் தெங்கு ரசாலி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவரிடம், 2008 மார்ச் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கிளந்தான் அம்னோ தொடர்புக்குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ளாதது ஏன் என்று வினவப்பட்டது.

இப்போது பாஸ் கட்சியிடமுள்ள கிளந்தானை பாரிசான் நேசனல் (பிஎன்) திரும்பவும் கைப்பற்ற முடியுமா என்றும் அவரிடம் கேட்கப்பட்டது. தகுந்த ஏற்பாடுகளைச் செய்தால் முடியும் என்றார்.

“நம்பிக்கை எப்பவும் உண்டு. அதற்குத் தகுந்த ஏற்பாடுகளும் மனவுறுதியும் தேவை”, என்றாரவர்.

அவரது அரசியல் நிலையை வலுப்படுத்திக்கொள்வதற்கு எதிர்த்தரப்பினருடன் சேர்ந்துகொள்வாரா என்றும் வினவப்பட்டது.அதற்கு அவர், “நான் மணமானவன், இல்லையா? என் மனைவியுடன் குடித்தனம் செய்வதே நல்லது ”,என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார். 

-பெர்னாமா

TAGS: