61 வயது ஸ்டோர்கீப்பர் மற்றும் அவரது பிள்ளைகளின் சமயத் தகுதி பற்றி எழுப்பப்பட்டுள்ள ஐந்து அரசமைப்புக் கேள்விகளுக்கு கூட்டரசு நீதிமன்றம் பதில் அளிக்காது. காரணம் அதன் விவரங்கள் ( facts) சர்ச்சைக்குரியதாக இருப்பதாகும்.
ஷா அலாமில் உள்ள உயர் நீதிமன்றம் அந்தக் கேள்விகளை உறுதி செய்ய வேண்டும் என முறையீட்டு நீதிமன்ற தலைவர் முகமட் ராவ்ஸ் ஷரிப் தலைமையில் கூடிய ஐந்து நீதிபதிகளைக் கொண்ட குழு முடிவு செய்தது.
புத்ராஜெயாவில் அந்த முடிவை அறிவித்த முகமட் ராவ்ஸ், அந்த வழக்கு விவரங்கள் சர்ச்சைக்கு இலக்காகியுள்ளன. ஆகவே அந்த விவகாரம் உயர் நீதிமன்றத்துக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் எனச் சொன்னார்.
“அந்த விவரங்கள் மீது உயர் நீதிமன்றம் முடிவு செய்ய நாங்கள் அனுமதிக்கிறோம்,” என அந்த விண்ணப்பத்தை நிராகரித்த அவர் கூறினார்.
மலாயா தலைமை நீதிபதி சுல்கெப்லி அகமட் மாக்கினுடின், கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளான ஹஷிம் யூசோப், சிரியாடி ஹாலிம் ஒமார், ஹசான் லா ஆகியோர் மற்ற நான்கு நீதிபதிகள் ஆவர்.
ஸ்டோர் கீப்பரான Zaina Abdin B Hamid @ S Maniam or Balachandran, அவரது இரண்டு புதல்வர்களான Surindran a/l Zaina Abdin, Mohanasubash a/l Zaina Abdin, புதல்வியான Chandrika a/p Zaina Abdin ஆகியோர் இந்துக்கள் என்றும் தாங்கள் முஸ்லிம்களாக ஒரு போதும் இருந்தது இல்லை என்றும் அவர்கள் கூறினர்.
முஸ்லிம் பெயரைத் தாம் கொண்டிருந்த போதிலும் பிறந்தது முதல் தாம் இஸ்லாத்தை பின்பற்றியதில்லை என்றும் இந்து பழக்கங்களைப் பின்பற்றுவதாகவும் இந்து மாது ஒருவரைத் திருமணம் செய்திருப்பதாகவும் தமக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் Zaina Abdin ஒர் அபிடவிட் வழி உறுதி செய்துள்ளார்.
அவருடைய திருமணத்தை தேசியப் பதிவுத் துறை 1986ம் ஆண்டு பதிவு செய்துள்ளது.
Zaina-வின் தாயார் ஒரு முஸ்லிம் என்றும் அவரது தந்தை இஸ்லாத்துக்கு மதம் மாறியவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
என்றாலும் அவர்கள் இருவரும் Zaina சமர்பித்த அபிடவிட்டின் படி இந்து சமயத்தைப் பின்பற்றி வருகின்றனர்.
Zaina-வையும் அவரது பிள்ளைகளையும் வழக்குரைஞர்களான கே சண்முகாவும் பாஹ்ரி அஸ்ஸாட்-டும் பிரதிநிதித்தனர்.