பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தமது துணைவியார் ரோஸ்மா மான்சோர் அண்மையில் சிட்னியில் பொருட்களை வாங்கிக் குவித்தார் என்ற தகவல்கள் தமக்கு மோசமான தோற்றத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வேண்டுமென்றே ஜோடிக்கப்பட்டன” எனக் கூறுகிறார்.
கார்ல் காப் என்னும் ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கிய ஆடையின் விலை 100,000 ஆஸ்திரேலிய டாலர் ( 323,000 மலேசிய ரிங்கிட்) எனக் கூறும் தகவல்களை உறுதி செய்யுமாறு டிவிட்டர் பயனீட்டாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது அவர் அவ்வாறு பதில் அளித்தார்.
“தங்களது தலைவர்கள் பற்றிய மக்கள் எண்ணத்தை மாசுபடுத்தும் பொருட்டு வேண்டுமென்றே அந்தத் தகவல்கள் விருப்பம் போல் மிகைப்படுத்தப்பட்டு ஜோடிக்கப்பட்டன, என அவர் நேற்றிரவு டிவிட்டரில் தெரிவித்தார்.
மின் அஞ்சல்கள் பரிமாற்றம்
நஜிப், ரோஸ்மா செலவுகள் மீது தாம் வழங்கிய தகவல்களுக்கு ஆதரவாக சிட்னியைத் தளமாகக் கொண்டுள்ள மோஸ்தர் ( fashion )பத்திரிக்கையாளரும் வலைப்பதிவாளருமான பேட்டி ஹண்டிங்டன் மின் அஞ்சல் பரிவர்த்தனைகளை நேற்று வெளியிட்டார்.
டார்லிங் ஹோட்டல் penthouseல் அந்தத் தம்பதியினரை காப் சந்தித்தார் என்றும் அப்போது “ரோஸ்மாவின் பல அன்றாட நிகழ்வுகளுக்காக” 61 வகையான பொருட்களுக்கு அளிப்பாணை வழங்கப்பட்டதாக காப்-பின் பிரச்சார அதிகாரி ஹோலி பீயர் தெரிவித்தார் என்றும் தாம் ஜனவரி 19ம் தேதி வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்ததை ஹண்டிங்டன் மீண்டும் வலியுறுத்தினார்.
அந்த ஆடைகள் பொருத்தமாக இருப்பதை சரி பார்ப்பதற்காக காப் கோலாலம்பூருக்கு இம்மாதம் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற தமது முன்னைய தகவலையும் அந்த மோஸ்தர் பத்திரிக்கையாளர் தற்காத்துப் பேசினார்.
ஆனால் காப், ஜனவரி 25ம் தேதி விடுத்த அறிக்கையில் தமது வடிவமைப்புக்களுக்கான பொருட்களை பெறுவதற்கான ஆசியச் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக மலேசியப் பயணம் அமைவதாக குறிப்பிட்டுள்ளார்.
“அந்த ஆடைகள் பொருத்தமாக இருப்பதை சரி பார்ப்பதற்காக கோலாலம்பூருக்கு வருமாறு தம்மை ரோஸ்மா கேட்டுக் கொண்டதாக காப் என்னிடம் ( ஹண்டிங்டன் ) கூறினார்.”
தாம் சிட்னியில் அளவு மீறி பொருட்களை வாங்கியதாக கூறப்படுவதை ரோஸ்மா மறுத்துள்ளார்.
“அவை வெறும் குப்பை. மிகைப்படுத்தப்பட்டவை, உண்மையற்றவை,” என அவர் மலேசியாகினியிடமும் தி சன் பத்திரிக்கையிடமும் ஜனவரி 23ம் தேதி மசீச சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின் போது கூறினார்.