பள்ளிவாசல்களுக்கு பாதுகாவலர்களை நியமிக்கலாம் என பெர்க்காசா யோசனை

அண்மையில் இரண்டு பள்ளிவாசல்களில் பன்றித் தலைகள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாவலர்களை பள்ளிவாசல்கள் நியமிக்கலாம் என மலாய் நெருக்குதல் அமைப்பான பெர்க்காசா யோசனை கூறியுள்ளது.

அதன் மூலம் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என அது எண்ணுகிறது.

“பிரதமர் இல்லம், அமைச்சர்களுடைய வீடுகள், மந்திரி புசார்களின் வீடுகள் ஆகியவற்றில் பல பாதுகாவலர்கள் வேலை செய்கின்றனர்.”

“பள்ளிவாசல்கள், சூராவ்கள், மதராஸாக்கள் போன்ற வழிபாட்டு இடங்கள் நமது பொறுப்பாகும். அவற்றையும் காவல் புரிய வேண்டும்,” என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி இன்று விடுத்த ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எல்லாப் பள்ளிவாசல்களும் தங்கள் சொந்த நிதிகளைப் பயன்படுத்தி இரண்டு ஷிப்ட் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். அதற்கு இஸ்லாமிய விவகாரத் துறையும் உதவி செய்யலாம் என்றார் அவர்.

“பள்ளிவாசல்களைக் காவல் புரியும் போது அவர்கள் தொழுகை நடத்தவும் முடியும். அததகைய சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் பாதுகாவலர்கள் இருப்பது அவசியமாகும்.”

கோலாலம்பூர் ஜாலான் செந்தூலில் உள்ள அல் ஹிடாயா பள்ளிவாசலின் முக்கிய நுழைவாயிலுக்கு வெளியில் பன்றித் தலையும் மற்ற பாகங்களுக் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்ராஹிமின் அறிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் சிலாங்கூர் ரவாங்கில் உள்ள நுருல் அமான் பள்ளிவாசலின் நுழைவாயிலில் ஜனவரி 31ம் தேதி பன்றித் தலை கண்டு பிடிக்கப்பட்டது.

TAGS: