1பராமரிப்புத் திட்டத்தை மருத்துவர்கள் நிராகரிக்கின்றனர்

உடல்நலப் பராமரிப்பை ஒரு வியாபாரப் பொருளாகக் கருதி ஆதாயம் தேட முனையக்கூடாது என்று எச்சரிக்கும் மருத்துவர்களும் அரசு-சார்பற்ற அமைப்புகளும் 1மலேசியத் திட்டத்தின்கீழ் முன்மொழியப்பட்டிருக்கும் 1பாராமரிப்புத் திட்டத்தை அரசாங்கம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றன. 

 உடல்நலப்பராமரிப்புக்கு நிதியுதவி செய்ய காப்புறுதியை அடிப்படையாகக் கொண்ட சுகாதார அமைச்சின் முன்னெடுப்பான இத்திட்டத்தைக் குடிமக்கள் உடல்நலப் பராமரிப்புக் கூட்டமைப்பு (சிஎச்சி), தனியார் மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பும் எதிர்க்கின்றன.

 “1பராமரிப்புத் திட்டம் நடப்புப் பிரச்னைகளையும் விவகாரங்களையும் கருத்தில் கொள்ளவில்லை. அதனால் பயனீட்டாளர் நலனுக்குக் கேடுதான் விளையும்.

“சேவைகளை வெளியாட்களிடம் ஒப்படைக்கும் போக்கு பெருகிவருவதையொட்டி உடல்நலனைப் பராமரிக்கும் பொறுப்பையும் வெளியாட்களிடம் ஒப்படைக்க விரும்புகிறார்கள்”, என்று சிஎச்சி பேச்சாளர் டாக்டர் டி.ஜெயபாலன் நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஊடக விளக்கக்கூட்டத்தில் கூறினார்.

“இதைச் சமூகக் காப்புறுதித் திட்டம் என்று அழைக்கிறார்கள்.ஆனால், இதில் சமூகநலன் எதுவும் இல்லை. மக்கள் நலன் சம்பந்தப்பட்டது என்றால் ஏன் பயனீட்டாளர் அமைப்புகளைக் கலந்துரையாடலுக்கு அழைக்கவில்லை?”, என்று ஜெயபாலன் வினவினார்.

“அவர்கள் ஒவ்வொருமுறையும் முயற்சி மேற்கொண்டபோது மக்களும் பயனீட்டாளர் சங்கங்கள் போன்ற தரப்பினரும் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர்……ஆனால், இப்போது எல்லாமே கமுக்கமாக செய்யப்படுகிறது”, என்று பொது சுகாதாரத்துறையில் நீண்ட அனுபவம் உள்ளவரான ஜெயபாலன் கூறினார்.

இதன் தொடர்பில்,“மலேசியர் அனைவருக்கும் உடல்நலப் பராமரிப்பு கிடைப்பதை உறுதிப்படுத்த” தேசிய அளவில் நிதி நிர்வாகம் ஒன்றை அமைப்பதற்கு வகைசெய்யும் சட்டமுன்வரைவு ஒன்று மார்ச் மாத நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்ற வதந்தியும் உலவுகிறது.

சிஎச்சி, 1பராமரிப்புத் திட்டத்தை நிராகரிக்குமாறு மலேசியர்களைக் கேட்டுக்கொள்ளும் இயக்கமொன்றை இணையத்தில்- ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும்- தொடங்கியுள்ளது.அது பணச்செலவுமிக்க திட்டம் என்று கூறும் சிஎச்சி, வேலை செய்யும் ஒவ்வொருவரும் தன் மாதச் சம்பளத்தில் 10விழுக்காட்டை அதற்குக் கொடுக்க வேண்டியிருக்கும் என்கிறது. ஆனால், உடல்நலப் பராமரிப்புச் சேவை தேவை என்கிறபோது  சில நிபந்தனகளுடன்தான் அது வழங்கப்படும்.

“அரசு சமூகநலன் பற்றி நினைக்கிறதா, சமூக நலன் என்றால் என்ன? சொந்த பணத்தைக் கொண்டு செய்வதல்ல சமூகநலன்.சமூகநலன் சமூக அளவில் செய்யப்படுவது.அச்சேவையை அரசாங்கம்தான் வழங்க வேண்டும்”, என்று ஜெயபாலன் கூறினார்.

தனியார் மருத்துவர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஸ்டீபன் செள(வலம்),உடல்நலப் பராமரிப்புமுறையை ஒட்டுமொத்தமாக திருத்தி அமைப்பதற்குப் பதிலாக அரசாங்கம் அதில் உள்ள பலவீனங்களைச் சரிசெய்து உடல்நலப் பராமரிப்புச் சேவை எளிதாகக் கிடைப்பதற்கு வகைசெய்யலாம் என்றார்.

அரசாங்கம் ஹாங்காங்யைப் பின்பற்ற வேண்டும் என்றும் செள கூறினார்.ஹாங்காங், தன்னார்வ மருத்துவ காப்புறுதித் திட்டம் ஒன்றைத் தொடங்க முனைந்தபோது அது பற்றி பொதுமக்கள் கருத்துரைப்பதை ஊக்குவித்தது.

“1பராமரிப்புத் திட்டத்துக்காக நடப்பில் உள்ள முறை கைவிடப்பட்டால் அது நாட்டை அழிவுக்குத்தான் இட்டுச் செல்லும்”, என்று ஜெயபாலன் குறிப்பிட்டார்.