நபிகள் நாயகத்தின் பிறந்த நாளில் ஜேபி-யில் கேளிக்கை நிகழ்வுகளுக்குத் தடை

ஞாயிற்றுக்கிழமை நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையொட்டி கேளிக்கை நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டும் என்று ஜோகூர் கேளிக்கை மைய உரிமையாளர்கள், ஊராட்சி மன்ற அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

கேளிக்கை மையங்களுக்கு பிப்ரவரி 4 இரவு ஏழு மணி தொடங்கி மறுநாள் இரவு ஏழுமணிவரை தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி மன்றம் திங்கள்கிழமை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இத்தடைவிதிப்பு, இரவு விடுதிகள், இன்னிசை விடுதிகள்,கரோவோக்கே மையங்கள், ஸ்பா-கள், உடம்புப் பிடி கூடங்கள், பில்லியர்ட் கூடங்கள், சினிமா கொட்டகைகள் ஆகியவற்றை உள்ளடக்குவதாக  ஜோகூர் கேளிக்கை மைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டான் யாம் மெங் கூறினார்.

தம் சங்கம் சமய விடுமுறைகளை “100 விழுக்காடு” மதிப்பதாகக் கூறிய டான், தங்கள் பிழைப்பு பாதிக்கப்படும் என்பதைக் கருத்தில்கொண்டு அதிகாரிகள் தடையைத்“ தளர்த்துவார்கள்” என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

வார இறுதியில் நீண்ட விடுமுறை வருவதால்- சில மாநிலங்களில் செவ்வாய்க்கிழமைவரை விடுமுறை நீள்கிறது- பெரும் கூட்டம் கூடும் அதில் நல்ல வருமானம் கிடைக்கும் என்று கேளிக்கை மையங்கள் எதிர்பார்க்கின்றன.

சீனப்புத்தாண்டில் நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்ட வியாபாரிகள் அப்போது ஏற்பட்ட வருமான இழப்பை இந்த வாரஇறுதி வியாபாரத்தில் சரிக்கட்டலாம் என்று நினைக்கிறார்கள்.

“ஆனால், வியாபாரம் மும்முரமாக நடக்கக்கூடிய முக்கிய நாளில் தடை விதிக்கப்படுகிறது”, என்று கூறிய டான் 500-இலிருந்து 600-கேளிக்கை மையங்கள் அதனால் பாதிக்கப்படும் என்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

டிசம்பர் இறுதியில் புத்தாண்டுக்கு முந்திய நாளிலும் இதேபோன்ற தடை விதிக்கப்பட்டது. காலஞ்சென்ற சுல்தானின் நினைவுநாளையொட்டி அத்தடை விதிக்கப்பட்டது.

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹோ சியோங் சாங்-கைத் தொடர்புகொண்டு விசாரித்ததில் தடைவிதிப்புப் பற்றித் தமக்குத் தெரியாது என்றார். ஆனால், சமய விடுமுறைகளின்போது கேளிக்கை நிகழ்வுகளை மிதமான அளவில் வைத்துக்கொள்ளுமாறு ஜோகூரில் கேட்டுக்கொள்வது வழக்கம் என்றார்.

“கடந்த டிசம்பர் 31-இல் புத்தாண்டு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அன்று காலஞ்சென்ற சுல்தானின் நினைவு நாளுமாகும் என்பதால் கொண்டாட்டங்களை மிதமான அளவில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம்”, என்றவர் விளக்கினார்.

“அன்று கடைகளை அடைக்கச் சொல்லவில்லை.கொண்டாட்டங்களை மிதமாக வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டோம். வியாபாரங்களுக்குத் தடை விதிக்கவில்லை.”

ஹூ, சுற்றுலா, உள்நாட்டு வாணிகம், பயனீட்டாளர் விவகாரம் ஆகியவற்றுக்குப் பொறுப்பாக உள்ளார். அவரது ஆட்சிக்குழு சகாவான டான் கொக் ஹோங்கைத் தொடர்புகொண்டபோது அவர் கருத்துரைக்க மறுத்து விட்டார்.