வெள்ளை அங் பாவ்: இப்ராஹிம் அலி அதனை “வேண்டுமென்றே செய்யவில்லை”

பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி ‘வெள்ளை அங் பாவ்-வை வேண்டுமென்றே வழங்கியதாக ஸ்ரீ தேசா மசீச தலைவர் டாக்டர் கொலின் தியூ கூறுவதை அந்த மலாய் வலச்சாரி அமைப்பு மறுத்துள்ளது.

அதற்குப் பதில் கடுமையான குறை கூறப்பட்டுள்ள அந்தச் சம்பவத்துக்கு அதன் தலைமைச் செயலாளர் சையட் ஹசான் சையட் அலி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

டாக்டர் தியூ, இப்ராஹிமை மட்டும் சுட்டிக் காட்டுவது நியாயமில்லை; பெர்க்காசா தலைவர் பாசிர் மாஸில் சிவப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு சிவப்பு நிற அங் பாவ் உறைகளை வழங்கியதுடன் டாக்டர் தியூ ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.

கோலாலம்பூரில் அண்மையில் நடத்தப்பட்ட சீனப் புத்தாண்டு நிகழ்வுக்குத் தாம் ஏற்பாடு செய்ததாகவும் அந்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவுக்குத் தாம் தலைவராக இருந்ததாகவும் சையட் ஹசான் சொன்னார்.

அன்றைய தினம் இப்ராஹிம் தாமதமாக வந்து சேர்ந்தார். ‘அங் பாவ்’ விநியோகிக்க வேண்டிய நேரம் வந்த போது “என் உதவியாளர் விருந்தினர்களிடம் கொடுப்பதற்காக ரொக்கம் வைக்கப்பட்டிருந்த வெள்ளைக் கடித உறைகளை இப்ராஹிமிடம் கொடுத்தார்,” என சையட் ஹசான் தெரிவித்தார்.

“இப்ராஹிமுக்கு அங் பாவ் நிறம் பற்றி நினைவுக்கு வரவில்லை. அது குறித்து இப்ராஹிமுக்குத் தெரியாது என நான் நம்புகிறேன். பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டதே அவருக்குப் பெருமிதமாக இருந்தது. அந்த வெள்ளைக் கடித உறையின் அர்த்தம்… இறந்தவரின் குடும்பத்துக்கு ஈமச் சடங்குகளுக்காக கொடுக்கப்படும் அன்பளிப்பு…  என்பது கூட இப்ராஹிமுக்குத் தெரியுமா  எனக்குத் தெரியவில்லை.”

“அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களை அவமானப்படுத்தும் நோக்கம் இப்ராஹிமுக்கு இல்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும். அந்த நிகழ்வைத் தொடர்ந்து டாக்டர் தியூ அவரது சமூகத்திடமிருந்து கடுமையான நெருக்குதலுக்கு இலக்காகியிருக்கிறார். காரணம் அவர் குறை கூறப்பட்டுள்ளார். அவரது கிளினிக்கை புறக்கணிக்குமாறு கூட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது,” என சையட் ஹசான் ஒர் அறிக்கையில் குறிப்ப்ட்டுள்ளார்.

‘வெள்ளை அங் பாவ்’ களை  இப்ராஹிம் விநியோகம் செய்தது வேண்டுமென்றே செய்யப்பட்ட நடவடிக்கை என நேற்று டாக்டர் தியூ கூறியிருந்தார். சீனர்களுடைய பழக்க வழக்கங்கள் பற்றி அவருக்கு நன்கு தெரியும் என்றும் அவர் சொன்னார்.

ஜனவரி 29ம் தேதி நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் இப்ராஹிமுக்கு அருகில் தியூ காணப்படும் படங்கள் வெளியானதும் அவர் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார்.

கிளந்தான் பாசிர் மாஸில் சீனப் புத்தாண்டு நிகழ்வு ஒன்றில் இப்ராஹிம் கலந்து கொண்டது பற்றிய செய்தியை படித்த பின்னர் தாம் அந்த முடிவுக்கு வந்ததாக தியூ தெரிவித்தார்.

அவர் நேற்று கோலாலம்பூர் கூச்சாய் லாமாவில் நிருபர்களிடம் பேசினார்.

ஜனவரி 21ம் தேதி தண்டாங் கம்போங் பாசிரில் முதியவர்களுடன் சிவப்பு நிற உடையை அணிந்திருந்த இப்ராஹிம் காணப்படும் படமும் அந்தச் செய்தியுடன் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இப்ராஹிம் பாசிர் மாஸ் எம்பி ஆவார்.

“இப்ராஹிம் அங் பாவ் (சிவப்பு உறைகள்)-களையும் மண்டரின் ஆரஞ்சுப் பழங்களையும் மக்களுக்கு வழங்கினார் என்றும் அந்தச் செய்தியில் எழுதப்பட்டுள்ளது. ஆகவே ஜனவரி 29ம் தேதி அவருக்கு சீனர்களுடைய பழக்க வழக்கங்களைப் பற்றித் தெரியாது எனச் சொல்வதற்கு வழியே இல்லை,” என்றும் தியூ குறிப்பிட்டார்.