ஷாரிஸாட்: “நான் விலக மாட்டேன்”

அம்னோ மகளிர் பதவியைத் தாம் துறக்க வேண்டும் என எந்தத் தரப்பு அழுத்தம் கொடுத்தாலும் தாம் அதற்குப் பணியப் போவதில்லை என மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறுகிறார்.

அரசியல் தலைவர்கள் நெருக்குதலை எதிர்நோக்குவது வழக்கத்திற்கு மாறானது அல்ல. அது அரசியலில் ஒர் அங்கம் என்றார் அவர்.

“அம்னோ மகளிர் பிரிவு நடைமுறைகளை அறிந்தவர்கள் நான் பதவி விலக வேண்டும் எனக் கேட்டுக் கொண்டால் அது அவர்கள் சொந்தக் குறிக்கோளைக் கொண்டுள்ளதாக அர்த்தம்”, என்றும் ஷாரிஸாட் சொன்னார்.

தாம் விலக வேண்டும் என்ற அறைகூவல்கள் தமது உணர்வுகளை பாதிக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், சமூகத்துக்குத் தொடர்ந்து சேவையாற்றுவதற்கு அவை தம்மை வலுப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தமது அமைச்சர் பதவி பற்றிக் கூறிய ஷாரிஸாட், அதனை முடிவு செய்யும் பொறுப்பை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் விட்டு விடுவதாகச் சொன்னார்.

“நான் நஜிப் தலைமைத்துவத்தை மதிக்கிறேன். ஆகவே நான் அமைச்சரவையில் தொடர்ந்து இருப்பதா இல்லையா என்பது அவரைப் பொறுத்தது.”

திருமெக்காவுக்கு உம்ரா பயணத்தை மேற்கொண்டு விட்டு அண்மையில் திரும்பிய அவர், புதன்கிழமை மீண்டும் வேலைக்குத் திரும்புகிறார்.

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட மய்யம் மீது சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து அவர் மூன்று வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டார்.

அந்த மையத்தை நடத்தும் தேசிய விலங்குக் கூட நிறுவனம் ஷாரிஸாட் கணவர் முகமட் சாலே இஸ்மாயிலுக்குச் சொந்தமானதாகும்.

அந்த மையத்தை நடத்துவதற்கு அரசாங்கம் 250 மில்லியன் ரிங்கிட் கடனை வழங்கியது. நாட்டின் மாட்டிறைச்சி இறக்குமதிகளைக் குறைப்பது அந்த மையம் அமைக்கப்பட்டதின் நோக்கமாகும்.

ஆனால் அது அதன் இலக்குகளை அடையத் தவறி விட்டது என 2011ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கூறப்பட்டது.

-பெர்னாமா

TAGS: