கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக், யூயூசிஏ என்ற பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை ஆதரிக்கும் தமது அறிக்கைகளை மீட்டுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அலோர் ஸ்டாரில் அவரது அலுவலகம் அமைந்துள்ள மாநிலச் செயலகக் கட்டிடத்துக்கு வெளியில் பிப்ரவரி 19ம் தேதி பேரணி ஒன்றை அவர் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எஸ்எம்எம் என்ற Solidariti Mahasiswa Malaysia அமைப்பு அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. குய்ன் என்ற Kolej Universiti Insaniah மாணவர்கள் உட்பட நூற்றுக் கணக்கான மாணவர்களை அதற்குத் திரட்டப் போவதாகவும் அது கூறியது.
யூயூசிஏ சட்டத்தை அஜிஸான் தொடர்ந்து வலியுறுத்தி வருவது மீது தான் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அது குறிப்பிட்டது.
யூயூசிஏ சட்டத்தைப் போன்று கடுமையான தனியார் உயர் கல்விக் கூட சட்டத்தை பயன்படுத்தி ஐந்து மாணவர்களை குய்ன் தலைவருமான அஜிஸான் நீக்கம் செய்துள்ளார்.
“என்றாலும் பிப்ரவரி 12ம் தேதி பாஸ் தலைவர்கள் கூட்டத்துக்குப் பின்னர் அஜிஸான் தமது அறிக்கைகளை மீட்டுக் கொள்வாரா இல்லையா என்பதை அது பொறுத்துள்ளது,” என எஸ்எம்எம் தலைவர் சுக்ரி ராஸாப் கூறினார்.
கெடா பாஸ் ஆணையாளருமான அஜிஸான் தமது அறிக்கைகளை மீட்டுக் கொண்டால் அவர் கல்வித் துறைச் சுதந்திரத்தையும் மாணவர் ஈடுபாட்டையும் ஆதரிக்கும் தலைவராக கருதப்படுவார் என்றும் சுக்ரி சொன்னார்.
“அத்தகைய தவறு மீண்டும் நிகழாது என்றும் பினாங்கு, சிலாங்கூர் மாநில அரசுகள் செய்வதைப் போன்று மாணவர் ஈடுபாட்டை பாதுகாப்பதாகவும் கெடா மந்திரி புசார் உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் நாங்கள் விரும்புகிறோம்,” என அவர் நேற்று விடுத்த அறிக்கை கூறியது.
பிப்ரவரி 12ம் தேதி கூட்டத்தில் மாணவர்களையும் சம்பந்தப்படுத்துமாறும் எஸ்எம்எம் பாஸ் தலைவர்களைக் கேட்டுக் கொண்டது. அதன் வழி அஜிஸான், மாணவர்கள் ஆகிய இரு தரப்பின் கருத்துக்களையும் அவர்கள் அறிய முடியும் என அது கருதுகிறது.