வெறுப்பைத் தூண்டும் சுவரொட்டிகளைக் கண்டு கலங்கவில்லை டிஏபி

இன்று காலை தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் (டிடிடி ஐ) பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பொதுப் பிரமுகர்களான அம்பிகா ஸ்ரீநிவாசன், ஏ.சமட் சைட் ஆகியோர்மீது வெறுப்பைத் தூண்டும் சுவரொட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.ஆனால், அவை பற்றி டிஏபி கலக்கமடையவில்லை. அச்சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் யாரோ அவர்கள்மீதுதான் மக்கள் அதிகம் வெறுப்புக்கொள்வார்கள் என்கிறது அக்கட்சி.

“அதற்குப் பொறுப்பானவர்கள் யாரோ அவர்களை மன்னிக்கிறோம்.இதுபோன்ற செயல்களில் அவர்கள் எவ்வளவுக்கு ஈடுபடுகிறார்களோ அவ்வளவுக்கு மக்கள் அவர்களை வெறுப்பார்கள்”, என்று செகாம்புட் டிஏபி எம்பி லிம் லிப்  எங் கூறினார்.

அந்த வீடமைப்பு பகுதியில் சாலையோரமாக உள்ள மிகப் பெரிய விளம்பரப் பலகையில் பல டஜன் வண்ணச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. 

ஒரு சுவரொட்டியில் லிம்-மின் படத்தின்கீழ் மலாய்-எதிரி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொன்றில் பெர்சே தலைவர் அம்பிகாவின் தேசிய கவிஞர் சமட் சைட்டின் படமும் பொறிக்கப்பட்டிருந்தன.

“டிடிடிஐ போலீசார் இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பதை அறிவிக்க வேண்டும். நஜிப்பின் உருமாற்றத் திட்டத்தின்கீழ் அங்கு நிறைய காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பதால் அவர்களை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும்”, என்று லிம் கூறினார்.