இண்ட்ராப்: தமிழ்ப்பள்ளிகள் அரசாங்க முழு உதவி பெறும் பள்ளிகளாக்கப்படும் என்று நஜிப் அறிவிக்க வேண்டும்

பத்துமலை தைப்பூச திருவிழாவிற்கு பிரதமர் நஜிப் துன் ரசாக் வருகை புரியவிருப்பதை தொடர்ந்து பல்வேறு கருத்துகள் மலேசிய இந்தியர்களிடேயே பரவலாக வலம் வந்து கொண்டிருகின்றன.

பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டின் பிரதமர் என்ற முறையில், குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் முக்கியமான ஒரு விழாவில் கலந்து கொள்ள முன்வருவது மேலோட்டமாக  பார்க்கையில் வரேவேற்கத்தக்கதாக தோன்றலாம்.

அதே சமயத்தில், பல லட்சம் இந்திய வாக்காளர்கள் ஒன்று கூடும் சமய வைபவத்தில் அவர்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் அங்கே அரசியல் பேசுவதால் பத்துமலை தைப்பூச திருவிழா அரசியல் மாநாடாக உருமாற்றம் கண்டு அதன் புனிதத்தன்மையையும், பொலிவையும், தனித்தன்மையையும் இழந்து விடுமோ என்று மலேசிய இந்துக்கள் கலக்கம் கொள்வதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது.

ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில் பிரத்தியேகமாக ஒரு கூட்டத்தைக் கூட்டி உரை நிகழ்த்துவது வேறு, மக்கள் தம் சமய சடங்குகளை நிறைவேற்ற கூடும் நிகழ்வில் அரசியல் பேசி இலாபம் தேட முனைவது வேறு.

பிரதமர் இந்தியர்களின் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர் என்றால், ஏழை இந்தியர்களுக்கு அவர்களின் உரிமைகள் இத்தனை நாளும் மறுக்கப்படிருப்பதை உணர்ந்து  நல்லதைச் செய்தே ஆகவேண்டும் என்ற மன நிலையை உண்மையிலேயே கொண்டிருப்பாரானால்,   தமிழ்க் கடவுள் முருகன்  குடிகொண்டிருக்கும் பத்து மலையில் நாட்டிலுள்ள அனைத்து தமிழ் பள்ளிகளும் பிப்ரவரி 7  ஆம்  தேதி முதல் அரசாங்க முழு உதவி பெரும் பள்ளிகளாக்கப்படும் என்று அறிவிக்க வேண்டும்.

எஸ்பிஎம் தேர்வில் 5 Aக்களுக்கு மேல்  எடுத்த மாணவர்களுக்கு இன, சமய பேதமின்றி மெட்ரிகுலேசன் கல்வி தொடர கட்டாய வாய்ப்பளிக்கப்படும், தேவையானவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் அளிக்கப்படும், தகுதியான மாணவர்களுக்கு உள்நாட்டு  பல்கலலைகழங்களில் அவரவர் விரும்பிய  துறைகளில் மேற்கல்வியை தொடரலாம், உயர்நிலை அரசாங்க வேலைகளுக்கு 7.5 விழுக்காடு  இந்தியர்களை பணிக்கமர்த்தும் வகையில் பல்கலைகழக இறுதி ஆண்டு மாணவர்களிடையே இப்பொழுதே  நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டு பட்டம் பெற்றதும் வேலையில் அமர்த்தப்படுவர் என்று பிரதமர் அறிவிக்க வேண்டும்.

இந்த அறிவிப்புகளை பிரதமர் நஜிப்  பத்துமலை தைப்பூச திருவிழாவின் போது  செய்வாரானால் மலேசிய இந்தியர்களின் பால் அக்கறை உள்ளவர் என்பதை நாம் ஓரளவு ஏற்றுகொள்ளலாம். இன்னும் செய்ய வேண்டிய மற்ற காரியங்களுக்கு   இந்த அறிவிப்புகளை நாம் ஓர் அச்சாரமாகக் கொள்ளலாம்.

மாறாக அதைச் செய்வேன், இதைச் செய்வேன், சிறப்புச் செயல் குழு அமைப்பேன், அதிகாரிகளை நியமிப்பேன், தீவிர நடவடிக்கை எடுக்கப்படும், ஆழமாக பரிசீலிக்கப்படும்   என்ற புளித்துப் போன எச்சில் தெறிக்கும் வெற்றுப் பேச்சுகளுக்கு மலேசிய இந்தியர்கள் இனியும்  மதிமயக்கம் கொள்ள மாட்டார்கள் என்பதை பத்துமலை தைப்பூசத்தில் உரை நிகழ்த்தும் போது பிரதமர் தெளிவாக புரிந்திருக்க வேண்டும்.

—————————————————————————————————————————————

வி.சம்புலிங்கம், மலேசிய தேசிய ஒருங்கிணைப்பாளர், இண்ட்ராப் மக்கள் சக்தி.