என்எப்சி தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள ஷாரிஸாட் தயாராக இருக்கிறார்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட பிரச்னையில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள தாம் அஞ்சவில்லை என ஷாரிஸாட் அப்துல் ஜலில் கூறுகிறார்.

மூன்று வார விடுமுறைக்குப் பின்னர் அடுத்த புதன்கிழமை மகளிர், சமூக குடும்ப மேம்பாட்டு அமைச்சர் பொறுப்புக்களை அவர் மீண்டும் ஏற்றுக் கொள்ளவிருக்கிறார்.

தமக்கு எதிராக கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் தமது உணர்வுகளை வலுப்படுத்தி எல்லாவிதமான சோதனைகளையும் எதிர்கொள்வதற்கு ஆயத்தம் செய்துள்ளதாகவும் ஷாரிஸாட் சொன்னார்.

“அது பரவாயில்லை. நாங்கள் அரசியல்வாதிகள். நாங்கள் சோதனைகளுக்கு உட்படும் போது மேலும் ஆற்றலைப் பெறுகிறோம்,” என அவர் புருவாஸில் அம்னோ மகளிர் பிரிவு தேர்தல் எந்திரத்தை வலுப்படுத்தும் நிகழ்வில் பங்கு கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார். அந்த நிகழ்வை பேரா மந்திரி புசார் ஜாம்ரி அப்துல் காதிர் தொடக்கி வைத்தார்.

விடுமுறையிலிருந்து வேலைக்குத் திரும்பும் ஷாரிஸாட்டை என்எப்சி விவகாரத்தில் ஷாரிஸாட் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட மேலும் பல முறைகேடுகளை அம்பலப்படுத்துவதின் வழி வரவேற்கப் போவதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறியுள்ளது பற்றி கருத்துரைக்குமாறு அம்னோ மகளிர் பிரிவுத் தலைவியுமான அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

என்எப்சி தனது இலக்கை அடைய தவறி விட்டது என 2010ம் ஆண்டுக்கான அறிக்கையில் தலைமைக் கணக்காய்வாளர் தெரிவித்ததைத் தொடர்ந்து ஷரிஸாட்டின் கணவர் முகமட் சாலே இஸ்மாயில் தலைமை தாங்கும் என்எப்சி சர்ச்சைக்கு இலக்காகியது.

பெர்னாமா

TAGS: