செராஸ் அம்னோ: அம்னோ மகளிர் பிரிவை கவசமாகப் பயன்படுத்த வேண்டாம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன சர்ச்சையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அம்னோ மகளிர் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலில் அந்தப் பிரிவைப் பயன்படுத்திக் கொள்வதாக செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சையட் அலி அல்ஹாப்ஷி குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று வெளியான செராஸ் அம்னோ வலைப்பதிவில் அவ்வாறு அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தாம் அம்னோ போராட்டத்தைத் தொடருவதில் உண்மையாக இருக்கிறாரா அல்லது தமது அரசாங்கப்பதவியைத் தற்காத்துக் கொள்வதில் அதிக அக்கறை கொண்டுள்ளாரா என ஷாரிஸாட் தம்மையே கேட்டுக் கொள்ள வேண்டும் என சையட் அலி அந்த வலைப்பதிவில் கூறியுள்ளார்.

“அமைச்சர் பதவியைத் துறப்பது அவ்வளவு சிரமமானதா? அவர் விடுமுறையில் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. தம்மை வீழ்த்துவதற்கு சதித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் மற்றவர்கள் மீது பழி போடவும் வேண்டியதில்லை.”

“அவரை இறக்குவதற்கு சிலர் விரும்புவதாக கதைகளை அவர் ஜோடிக்கக் கூடாது. தமது பலவீனங்களையும் குளறுபடிகளையும் மறைப்பதற்கு அவர் அம்னோ மகளிர் பிரிவை ஒரு கவசமாகப் பயன்படுத்தக் கூடாது,” என சையட் அலி சொன்னார்.

ஒரு மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு வலுவாகத் திகழும் அம்னோ மகளிர் பிரிவைக் கீழறுப்பதற்காக தமது எதிரிகள் தமக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதாக ஷாரிஸாட் அடிக்கடி கூறிக் கொள்வதைத் தொடர்ந்து சையட் அலி, கவசம் குறித்த அந்தக் கருத்தை வெளியிட்டிருக்க வேண்டும்.

2007ம் ஆண்டு 250 மில்லியன் ரிங்கிட் எளிய அரசாங்கக் கடனுடன் ஷாரிஸாட் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட என்எப்சி திட்டம் தனது இலக்கை அடையத் தவறி விட்டது என 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட  பின்னர் அந்த நிறுவனம் மீது சர்ச்சை எழுந்துள்ளது. அதனுடன் மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான ஷாரிஸாட்டும் இணைத்துப் பேசப்பட்டு வருகிறார்.

TAGS: