ஷரிசாட்டின் விடுப்பை அமைச்சரவை நீட்டிக்க வேண்டும்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) விவகாரத்தில் அம்னோ மகளிர் தலைவியும் குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சருமான ஷாரிசாட் அப்துல் ஜலிலுக்குத் தொடர்பில்லை என்று எம்ஏசி இன்னும் அறிவிக்கவில்லை என்பதால் அவர் தொடர்ந்து விடுப்பில் இருப்பதுதான் முறையாகும் என்கிறார் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங்.

“ஷாரிசாட் முறைகேடுகள் எதிலும் ஈடுபட்டதில்லை, என்எப்சி ஊழலில் அவருக்குச் சம்பந்தமில்லை என்று எம்ஏசிசி அறிவித்து விட்டதா?

 “இல்லையே. அவர் எந்த நோக்கத்துக்காக விடுப்பில் சென்றாரோ அந்த நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை.அப்படி இருக்க ஒரு தெளிவான விடை கிடைக்கும்வரை அவரது விடுப்பை நீட்டிக்கக் கூடாதா?”, என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் வினவினார்.

நஜிப்பின் கையாலாகாத்தனம்

ஈப்போ தீமோர் எம்பியுமான லிம், பொதுவிலும் அம்னோவிலும் இவ்விவகாரத்துக்குச் சரியான தீர்வுகாண முடியாத பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் சாடினார். 

ஷாரிசாட் சுயமாகவே தீர்வு காணட்டும் என அம்னோ  கைவிட்டுவிட்டதையும் அவர் ஊழலுக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று முன்னாள் அம்னோ மகளிர் தலைவி ரபிடா அசீஸ்(வலம்), நடப்பு மகளிர் துணைத் தலைவி கமிலா இப்ராகிம், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி போன்றோர் வலியுறுத்தி இருப்பதையும் லிம் சுட்டிக்காட்டினார்.

“இது, பிரதமர் என்ற முறையிலும் அம்னோ தலைவர் என்ற முறையிலும் சரியான அரசியல்  தலைமைத்துவம் வழங்க முடியாத நஜிப்பின் கையாலாகாத்தனத்தைக் காண்பிக்கிறது”,என்றாரவர்.

மசீச-வையும் அவர் விட்டு வைக்கவில்லை. இவ்விவகாரத்தைக் குறைகூறியுள்ள அதன் அமைச்சர்கள் நால்வரும் கட்சித் தலைவர் சுவா சொய் லெக்கும் ஷரிசாட்டின் விடுப்பை நீட்டிக்க வேண்டும் என்று அமைச்சரவையில் கேட்டுக்கொள்வார்களா அல்லது அதையும்விட மேலாக, இவ்விவகாரத்தை விசாரிக்க அரச ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறும் துணிச்சல் அவர்களுக்கு உண்டா என்றவர் வினவினார்.

TAGS: