பாஸ் வலியுறுத்துகிற சமூக நல நாடு கோட்பாட்டை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சாடியிருக்கிறார். அந்த மாதிரியைப் பின்பற்றிய நாடுகள் இறுதியில் பொருளாதார குழப்பத்தில் மூழ்கியுள்ளன என அவர் சொன்னார்
நஜிப் இன்று கிள்ளானில் சீனப் புத்தாண்டு விருந்து நிகழ்வில் உரையாற்றினார். சில ஐரோப்பிய நாடுகள் பின்பற்றுகின்ற சமூக நல நாடு என்னும் கொள்கைகளிலிருந்து மாறுபட்ட சமூகப் பாதுகாப்பு வலையை வழங்குவதே பிஎன் கொள்கை என்றார் அவர்.
“நாம் சமூக நல நாடு இல்லை என்றாலும் அரசாங்கம் சமூகப் பாதுகாப்பு வலையை வழங்கும் கொள்கையைப் பின்பற்றுகிறது. காரணம் சமூக நலக் கோட்பாட்டைப் பின்பற்றிய எல்லா நாடுகளும் மிகவும் கடுமையான பொருளாதாரப் பிரச்னைகளை இறுதியில் எதிர்நோக்கின,” என்றார் அவர்.
மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூக பாதுகாப்பு வலையை ஒரு நாடு அமலாக்கும் போது வளப்பமும் சமமான முறையில் விநியோகம் செய்யப்படும் என்றும் நஜிப் விளக்கினார்.
1.4 பில்லியன் ரிங்கிட் பெறும் ஒரே மலேசியா மக்கள் நலன் திட்டம் (Karisma) ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டத்தின் கீழ் (BR1M) 500 ரிங்கிட்டும் மாணவர்களுக்கு 100 ரிங்கிட்டும் வழங்கப்பட்டுள்ளது ஆகியவை சமூக பாதுகாப்பு வலைக்கான எடுத்துக்காட்டுக்கள் என்றார் அவர்.
2008ம் ஆண்டு பாஸ் சமூக நல நாடு என்னும் கொள்கையை அறிமுகம் செய்தது. அந்த யோசனைகள் புக்கு ஜிங்கா என அழைக்கப்படும் பக்காத்தான் ராக்யாட் அதிகாரத்துவக் கொள்கைப் பத்திரத்திலும் இடம் பெற்றுள்ளன.
பல சிலாங்கூர் சீன அமைப்புக்கள் ஏற்பாடு செய்த அந்த நண்பகல் விருந்தில் 1,500க்கும் மேற்பட்ட முதிய குடிமக்களும் ஆதரவற்ற குழந்தைகளும், பேறு குறைந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மற்ற அதிகாரத்துவ நிகழ்வுகளை போல இல்லாமல் அங்கு பிரதமருக்காக தனியாக பெரு மக்கள் மேசையோ சிவப்புக் கம்பளமோ போடப்படவில்லை.
நஜிப், நீண்ட மேசை ஒன்றில் பேறு குறைந்தவர்களுடன் அமர்ந்து பிளாஸ்டிக் பொட்டலத்தில் வைக்கப்பட்டிருந்த சாதாரண nasi lemak கை உட்கொண்டார்.
நல்ல சிவப்பு நிற பாத்தேக் சட்டையை அணிந்திருந்த பிரதமர் உரையாற்றிய பின்னர் ஒவ்வொரு மேசைக்காகச் சென்று 100 ரிங்கிட் வைக்கப்பட்டிருந்த அங் பாவ் (சிவப்பு உறைகளை) அங்கிருந்த பல இன மக்களுக்கும் வழங்கினார்.
அரசாங்க- தனியார் துறை ஒத்துழைப்பு மூலம் தனியார் நிறுவனங்கள் அந்தப் பணத்தை வழங்கியதாக நஜிப் சொன்னார். 50 சமூக நல அமைப்புக்களுக்கு அரசாங்கம் 500,000 ரிங்கிட்டை ஒதுக்கிய வேளையில் தனியார் நிறுவனங்கள் பணத்தையும் விருந்துச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டன.
அந்த நிகழ்வில் சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவர் நோ ஒமார், சிலாங்கூர் மசீச தலைவர் டொனால்ட் லிம், சிலாங்கூர் பிஎன் நடவடிக்கை இயக்குநர் முகமட் ஜின் முகமட் ஆகிய மாநில பிஎன் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.