விக்கிலீக்ஸ்:சீனர்கள் ஓரங்கட்டிருப்பதாக மசீசவால் ஒப்புக்கொள்ள முடியாது

“மசீசவினர் அமெரிக்க அரசதந்திரிகளைத் தனிப்பட்ட முறையில் சந்தித்தபோது மலேசியாவில் சீனர்கள் ஓரங்கட்டப்படுவதை ஒப்புக்கொண்டார்கள். ஆனாலும்,  அரசாங்கத்தையும் அதன் காரணமாக அம்னோவையும் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளமுடியாது என்றார்கள்.

இத்தகவல் அமெரிக்காவுக்கு  கோலாலம்பூரில் உள்ள அதன் தூதரகம் அனுப்பிவைத்த இரகசிய ஆவணமொன்றில் அடங்கியிருந்தததாக  அரசாங்கங்களின் இரகசியங்களை அம்பலப்படுத்திப் பரபரப்பை உண்டுபண்ணும் விக்கிலீக்ஸ் தளம் தெரிவிக்கிறது. மசீச உதவித்தலைவராக இருந்த ஒங் தி கியாட், தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரியைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது அவ்வாறு கூறினாராம்.

2006 அக்டோபர் 19 என்று தேதியிடப்பட்ட அந்த ஆவணம் இம்மாதம் வெளியிடப்பட்டிருக்கிறது.

“நாங்கள் ஓரங்கட்டப்பட்டிருப்பது உண்மைதான்.பெரிய தொழிலதிபர்களிலிருந்து சிறு ஸ்டால் வியாபாரிகள்வரை அதை அறிவார்கள்- ஆனால் மசீச-வால் அதை ஒப்புக்கொள்ள முடியாது”, என்று ஒங் கூறினாராம்.

சீனர்களுக்கு அதிருப்தி இருந்தாலும் அதைக் கட்சியால் வெளிக்காண்பிக்க முடியாது என்று பின்னர் மசீச தலைவர் ஆகி அதன்பின்னர் சுவா சொய் லெக்கால் தோற்கடிப்பட்ட ஒங் கூறினார் என்று அது கூறிற்று.

அரசாங்கத்துக்கு ஆதரவாக, மசீசவும் கெராக்கானும் மெளனமாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லாது போயிற்று என ஒங் குறிப்பிட்டதாகவும் அது தெரிவித்தது.

“முன்பெல்லாம், மேம்பாட்டுத் திட்டங்களில் அம்னோவுக்குக் கொடுத்ததுபோக “எஞ்சியிருப்பவை” கிடைத்துக்கொண்டிருந்தன. ஆனால் இப்போது அம்னோவிடமிருந்து துண்டுதுணுக்குகளாவது கிடைக்குமா என்றுதான் காத்திருக்கிறோம்”, என்று அந்த முன்னாள் மசீச தலைவர் வருத்தப்பட்டுக் கொண்டாராம். 

அதற்கு, ஒன்பதாவது மலேசிய திட்டம் ஓர் எடுத்துக்காட்டாகக் கூறப்பட்டது. அதில் 180 புதிய பள்ளிகள் கட்டத் திட்டமிட்டதாகவும் சிறுபான்மை இனத்தவர் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தபின்னரே இரண்டு தாய்மொழிப் பள்ளிக்கூடங்கள் கட்டும் திட்டம் அதில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாம்.

நடைமுறை நிலை குறித்து சீனர்கள் பெரிதும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் என்றும்  அதன் விளைவாக எதிர்வரும் தேர்தல் பிஎன்னுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கும் என்றும் ஒங் கூறியதாக அந்த ஆவணம் குறிப்பிட்டுள்ளது.

அவர் அஞ்சியதுபோல்தான் 2008 பொதுத்தேர்தலில் நடந்தது. நாடாளுமன்றத்தில் மசீசவிடமிருந்த 31 இடங்கள் 15 ஆகக் குறைந்தன; கெராக்கான் அதன் கோட்டையாக விளங்கிய பினாங்கு மாநிலத்திலிருந்து எல்லா இடங்களையும் பறிகொடுத்த நிலையில் விரட்டியடிக்கப்பட்டது.

இது, விக்கிலீக்ஸின் வசமுள்ள ஆவணங்களில் ஒரு பகுதிதான். அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கும் உலக முழுவதுமுள்ள அமெரிக்கத் தூதரகங்களுக்குமிடையில் நடந்துள்ள செய்திப் பரிமாற்றங்கள் தொடர்பில் 250,000 மேற்பட்ட ஆவணங்களை விக்கிலீக்ஸ் தன்வசம் வைத்துள்ளது.கடந்த நவம்பர் தொடங்கி அவற்றில் கொஞ்சம் கொஞ்சமாக அது வெளியிட்டு வருகிறது.