தேசியக் கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோனுக்கு “தவறான நிர்வாகம்” காரணமாக ரொக்கக் கையிருப்பில் 3.4 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது தகவல் வெளியிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அதனை ஆய்வு செய்ய ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என டிஏபி கோரியுள்ளது.
“முறைகேடான புரோட்டோன் நிர்வாகம், பல ஆண்டுகளாக அதற்கு ஏற்பட்டுள்ள பில்லியன் கணக்கான ரிங்கிட் இழப்பு குறிப்பாக ரொக்கக் கையிருப்பில் 3.4 பில்லியன் ரிங்கிட் குறைந்துள்ளது பற்றி விசாரிக்க ஆர்சிஐ அமைக்கப்பட வேண்டும் என டிஏபி கோருகிறது. இது மிகவும் கடுமையான விஷயமாகும். ஏனெனில் புரோட்டோன் நமது தேசிய கார் தயாரிப்பாளர்,” என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று ஒர் அறிக்கையில் கூறினார்.
புரோட்டோனுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை குறைப்பதற்காக 4 பில்லியன் ரிங்கிட்டாக இருந்த புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் ரொக்கக் கையிருப்புக்கள் 600 மில்லியன் ரிங்கிட்டாக குறைந்து விட்டது என மகாதீர் சொன்னதாக நேற்று ஆங்கில மொழி நாளேடான நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
தெங்கு மாஹாலில் அரீப், புரோட்டோன் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் 4 பில்லியன் ரிங்கிட் சேர்க்கப்பட்டதாக மகாதீர் சொன்னார். ஆனால் அவரை அடுத்துப் பொறுப்பேற்ற முகமட் அஸ்லான் ஹஷிம் காலத்தில் அந்த ரொக்கக் கையிருப்பு 600 மில்லியன் ரிங்கிகிட்டாக குறைந்து விட்டது.
இத்தாலிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான MV Augusta-வை அதிகம் தெரியாத Gevi SpA என்னும் நிறுவனத்துக்கு ஒரே ஒரு யூரோவுக்கு அதாவது 4 ரிங்கிட் 50 சென் னுக்கு விற்றதும் அந்த இழப்புக்கு ஒரு காரணம் என மகாதீர் சொன்னார். அந்த MV Augusta நிறுவனத்தில் 57 விழுக்காடு பங்குகளை கொள்முதல் செய்வதற்கு 300 மில்லியன் கொடுத்தது.
அதற்கு பின்னர் பிஎம்டபிள்யூ MV Augusta-வில் மூன்றில் ஒரு பங்கைப் பெறுவதற்கு 93 மில்லியன் யூரோ அல்லது 446 மில்லியன் ரிங்கிட்டைச் செலுத்தியது. அந்த நேரத்தில் MV Augusta-வில் எஞ்சியிருந்த பங்குகளை 900,000 அமெரிக்க டாலருக்கு அல்லது 360 மில்லியன் ரிங்கிட்டுக்கு Harley Davidson வாங்கியது.
புரோட்டோனின் வீழ்ச்சிக்கு ‘தவறான நிர்வாகமும்’ காரணம் என்றும் மகாதீர் கூறிக் கொண்டுள்ளார்.
Harley Davidson-க்கும் பிஎம்டபிள்யூ-வுக்கும் மொத்தம் 800 மில்லியன் ரிங்கிட்டுக்கு மீண்டும் விற்கப்பட்டதை பரிவர்த்தனைகள் காட்டுவதை லிம் சுட்டிக்காட்டினார்.
‘கஸானா பரிவர்த்தனையும் ஆய்வு செய்யப்பட வேண்டும்’
புரோட்டோனில் உள்ள தனது 42.7 விழுக்காடு பங்கை DRB-Hicom Bhd-க்கு விற்ற போது
அதற்கு நல்ல விலை கிடைத்ததா என்பதையும் ஆர்சிஐ ஆராய வேண்டும் என பினாங்கு முதலமைச்சருமான லிம் கேட்டுக் கொண்டார்.
“கஸானா, புரோட்டோன் பங்குகளை ஒரு பங்கு விலை 8 ரிங்கிட் வீதம் கொள்முதல் செய்துள்ள வேளையில் அதன் நடப்பு மதிப்பான 9.81 சென் னில் பாதி விலைக்கு அதாவது 5 ரிங்கிட் 50 சென் னுக்கு அதாவது மொத்தம் 1.3 பில்லியன் ரிங்கிட்டுக்கு விற்றுள்ளது.”
“மக்கள் வரிப்பணம் விரயமாக்கப்பட்டுள்ளதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு,” என அவர் சொன்னார்.
தெங்கு மஹாலில் புரோட்டோனுடைய ரொக்கக் கையிருப்பு 4 பில்லியன் ரிங்கிட்டாக உயருவதற்கு முக்கியப் பங்காற்றியவர் என்பதால் அரச விசாரணை ஆணையத்தில் அவர் அங்கம் பெறுவது முக்கியம் என்றும் லிம் கூறினார்.