2010ம் ஆண்டில் Yayasan Taqwa என்ற அறநிறுவனத்தின் கீழ் திரட்டப்பட்ட, 800,000 ரிங்கிட் ஸக்காட் நிதி குறித்து கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய மன்ற (MAIWP) ஆண்டறிக்கையில் ஏன் கணக்குக் காட்டப்படவில்லை என்பதற்குப் பிரதமர் துறை அமைச்சர் ஜமில் கிர் பாஹாரோம் விளக்கமளிக்க வேண்டும் என பாஸ் இளைஞர் பிரிவு கோரியுள்ளது.
கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய மன்ற ஆண்டறிக்கையில் அந்த அற நிறுவனம் 2010ல் 7.78 மில்லியன் ரிங்கிட் வருமானம் பெற்றதாகவும் 6.98 மில்லியன் ரிங்கிட் செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் எஞ்சிய 800,000 ரிங்கிட் பற்றி எந்த விவரமும் அதில் காணப்படவில்லை என பாஸ் இளைஞர் பிரிவின் ஸக்காட் பணிக்குழு இயக்குநர் கமருஸாமான் முகமட் சொன்னார்
“2010ம் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்படாத அந்த 800,000 ரிங்கிட் எங்கே?” என கமருஸாமான் வினவினார்.
அத்துடன் Yayasan Taqwa நிர்வாகத்துக்காக 2 மில்லியன் ரிங்கிட்டை அதாவது அதன் மொத்தச் செலவுகளில் 36 விழுக்காட்டைப் பயன்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த அறநிறுவனத்துக்கு தலைமை நிர்வாகி ஒருவரும் 17 ஊழியர்களும் இருப்பதைக் கருத்தில் கொண்டால் அந்த நிர்வாகச் செலவுகள் “மிக அதிகமாக” தோன்றுகிறது என்றும் கமருஸாமான் தெரிவித்தார்.
“ஸக்காட்டை பெறுவதற்கு தகுதியுள்ளவர்களுக்கு கொடுப்பதற்கு 64 விழுக்காடு மட்டுமே செலவு செய்யப்பட்டது ஏன்? உதவித் தேவைப்படுகின்ற மேலும் பலருக்கு அதிகமான பணத்தை செலவு செய்திருக்கலாமே?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.