ஒங்: அமானாவை அரசியல்கட்சியாக்க அவசரம் காட்ட வேண்டியதில்லை

அரசுசார்பற்ற அமைப்பான அமானா-வை அரசியல் கட்சியாக்க “அவசரம் காட்டவேண்டியதில்லை” என்கிறார் அதன் துணைத் தலைவர் ஒங் தி கியாட்.

மசீச முன்னாள் தலைவரான ஒங் தி கியாட், மலாய்மொழி நாளேடான சினார் ஹராபானுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறினார்.

அரசியலில் நீடித்த அனுபவமுடையவர்களைக் கொண்டமைந்த அந்த அரசுசார்பற்ற அமைப்பு(என்ஜிஒ) ஓர் அரசியல்  கட்சியாக மாறும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர்.

“அதற்கு இது தருணமல்ல என்று நினைக்கிறேன். இந்த என்ஜிஒ இன்னும் பல கட்டங்களைக் கடக்க வேண்டியுள்ளது”, என்று ஒங் கூறினார்.

இதற்குமுன்னர், சக துணைத் தலைவரான அப்துல் காடிர் ஷேக் பாட்சிர் மலேசியாகினி நேர்காணல் ஒன்றில், அந்த என்ஜிஓவை அரசியல் கட்சியாக்க வேண்டும் என்று அமானா உறுப்பினர்கள் பலர் நெருக்குதல் கொடுத்து வருவதாகக் கூறியிருந்தார்.

இதனிடையே ஒங், குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சாவின் தலைமையில் செயல்படும் அமானாவை “ஏமாற்றமடைந்த அரசியல்வாதிகளின்” என்ஜிஓ-வாக கருதுவது ஒரு தப்பான கண்ணோட்டம் என்று சினார் ஹரியானிடம் குறிப்பிட்டார்.

“பிஎன் பெரும்புள்ளிகளும் முன்னாள் அரசு-உயர் அதிகாரிகளும்கூட” அதில் உள்ளனர் என்று சொன்ன ஒங், மசீசமீது கொண்ட ஏமாற்றத்தின் காரணமாக அதில் சேரவில்லை என்றும் அந்த என்ஜிஓ தேசிய ஒற்றுமையையும் ஊழல்-எதிர்ப்பையும் வலியுறுத்துகிறது என்பதால் அதில் இணைந்ததாகவும் கூறினார்.

சினார் ஹராபான் நேர்காணலின் முதல்பகுதியில், ஒங் பிஎன்னுக்குச் சீனர்களின் ஆதரவு ஒரு நெருக்கடியான கட்டத்தை அடைந்திருப்பதாகக் கூறினார். பிஎன்னைவிட்டு விலகிச் செல்லும் பலர் உழைக்கும் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

“சீனர்கள் பொதுவாக பொருளாதார வாய்ப்புகளில் நியாயமான பங்கு கிடைப்பதை எதிர்பார்க்கிறார்கள்….பொருளாதாரத்தில் பெரும்பகுதி சீனர்களிடம் உள்ளதாகத்தான் பலரும் நினைக்கிறார்கள்.ஆனால், அது நல்ல தொடர்புகளைக் கொண்டுள்ள சிலரின் கைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறது.”

சிறு வணிகர்களுக்குப் பொருளாதார வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றாரவர்.