பாஸ் டிஏபி, பிகேஆர்-உடன் ஒத்துழைப்பதாக ஹசான் அலி சாடுகிறார்

பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக தாம் முறையீடு செய்து கொள்ளப் போவதில்லை என்பதற்கு ஐந்து காரணங்களை முன்னாள் பாஸ் உதவித் தலைவர் டாக்டர் ஹசான் முகமட் அலி முன் வைத்துள்ளார்.

பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் அவர் அதனைத் தெரிவித்துள்ளார்.

1) பாஸ் இஸ்லாமிய நாட்டை அமைப்பதற்கான தனது தொடக்க காலப் போராட்டத்தை கைகழுவி விட்டு,  எந்த ஒரு மதச் சார்பற்ற நாட்டிலும் அமலாக்கப்படக் கூடிய சமூக நல நாட்டை வலியுறுத்தி வருகிறது.

2) பாஸ் போற்றத்தக்க தனது நிலையையும் உறுதியையும் இழந்து விட்டது. அதனால் எதிர்த்தரப்புக் கூட்டணியில் உள்ள அதன் தோழமைக் கட்சிகள் குறிப்பாக டிஏபி அதனை அலட்சியம் செய்கின்றன. பாஸ் கட்சியின் இஸ்லாமியக் கோட்பாட்டை துணிச்சலாக நிராகரிக்கும் அளவுக்கு டிஏபி சென்றுள்ளது.

3) பாஸ் புத்ராஜெயாவை கைப்பற்றுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பதால் இஸ்லாத்தைத் தியாகம் செய்துள்ளது. “இஸ்லாத்தின் தெளிவான எதிரியான” டிஏபி-யுடன் அது ஒத்துழைக்கிறது.

4) பாஸ் 1981ம் ஆண்டு கோலத் திரங்கானு பாங்கோல் பெராடோங்கில் அப்துல் ஹாடி அவாங்கின் செய்தியை வெளியிட்டது. அம்னோ உறுப்பினர்கள் மத நம்பிக்கையற்றவர்களுடன் ஒத்துழைப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது இப்போது முஸ்லிம் அல்லாதவர்களுடன் ஒத்துழைக்கிறது. டிஏபி-யுடன் இணைந்து பணியாற்றவும் அது தயாராக உள்ளது.

5) நாடாளுமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ் பேராளர்களுடைய  விசுவாசம் அன்வார் இப்ராஹிமையே அதிகமாகச் சார்ந்துள்ளது. அந்த எதிர்த்தரப்புத் தலைவர் நாடாளுமன்றத்தில் பேசும் போது அவர்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பேசும் போது அதே அளவு கவனத்தை அவர்கள் செலுத்துவது இல்லை.

பாஸ் கட்சி தனது தொடக்க காலப் போராட்டத்திலிருந்து விலகி விட்டது என்றும் அது தொடர்ந்து எதிர்த்தரப்புக் கூட்டணியில் இருந்தால் மேலும் விலகிச் செல்லும் என்றும் ஹசான் அந்தப் பேட்டியில் சொன்னார்

“எதிர்த்தரப்புக் கூட்டணி நடப்பு ஏற்பாடுகளுடன் தேர்தலில் வெற்றி பெற்றால் இஸ்லாமிய நாடு இருக்காது, ஹுடுட் சட்டம் இருக்காது, பொருளாதாரம், சமூகம், விவசாயம், வெளியுறவுக் கொள்கைகள் ஆகியவற்றில் இஸ்லாமிய அம்சங்கள் இருக்க மாட்டா.”

“பாஸ் கட்சி டிஏபி, பிகேஆர்-உடன் ஒத்துழைக்கும் போது பாஸ் இஸ்லாமிய நாட்டை அமைக்க முடியாது. அதில் பிகேஆர் மூத்த தலைவருமான அன்வார் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.”

‘உலாமா தலைமைத்துவ ஆதிக்கம் இல்லை’

“நான் 15 ஆண்டுகள் பாஸ் கட்சியில் செலவு செய்துள்ளேன். அந்தக் கட்சி இஸ்லாத்தையும் உலாமா தலைமைத்துவத்தையும் மேம்படுத்துவதை அடிப்படை இலட்சியங்களாகக் கொண்டிருந்ததால் நான் அதில் இணைந்தேன். அதுதான் முக்கியக் காரணம். ஆனால் இப்போது அந்தக் கட்சியில் உலாமாக்கள் ஆதிக்கம் செலுத்தவில்லை. இஸ்லாமியக் கோட்பாடும் அதனிடம் இல்லை. ஆகவே நான் எந்த அம்சத்தை அந்தக் கட்சியில் பிடித்துக் கொண்டிருக்க முடியும்?” என ஹசான் வினவினார்.

“பாஸ் தலைமைத்துவம் தன்னை மேம்படுத்திக் கொண்டு  “islah” அல்லது சீர்திருத்ததை மேற்கொள்ள வேண்டும். காரணம் அந்தக் கட்சி இப்போது பின்பற்றுகின்ற கொள்கைகள் தவறானவை.”

“புத்ராஜெயா அவசியம் என்றாலும் இஸ்லாம், மலாய்க்காரர்கள், மலாய் ஆட்சியாளர்கள் ஆகியவற்றை நிலை நிறுத்துவதே நமது அரசியல் போராட்டத்தின் இறுதி இலட்சியமாக இருக்க வேண்டும்”, என்றும் ஹசான் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பெர்னாமா

TAGS: