கேஎல்ஐஏ2 செலவுகள் கூடியது பற்றி அமைச்சரைச் சந்திக்க டிஏபி விருப்பம்

கேஎல்ஐஏ2 என அழைக்கப்படும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் 2ன் கட்டுமானச் செலவுகள் 2.2 பில்லியன் ரிங்கிட் அதிகரித்ததற்கான காரணத்தை போக்குவரத்து அமைச்சர் கொங் சொங் ஹா வெளிப்படையாக தெரிவிக்க தவறி விட்டதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா சாடியிருக்கிறார்.

அதனால் தாம் அவரை அடுத்த வாரம் சந்திக்க விரும்புவதாக புவா இன்று ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறைந்த கட்டண விமான நிலையமான அதனைக் கட்டுவதற்கான நிதியைப் பெறுவதற்கு உத்தேச பங்கு வெளியீட்டுத் திட்டத்திலிருந்து 598 மில்லியன் ரிங்கிட்டை திரட்டப் போவதாக MAHB என்ற Malaysia Airport Holding Berhad ஜனவரி மாதம் 30ம் தேதி புர்சா மலேசியா பங்குச் சந்தைக்கு  அறிவித்துள்ளது. அது பொது நிதிகளை தியாகம் செய்வதற்கு இணையாகும் என்றும் புவா குறிப்பிட்டார்.

அரசாங்கம் மற்றும் பொது நிதிகளுக்கான அறங்காவலர்களாக உள்ள நடப்பு MAHB பெரிய பங்குதாரர்கள் அந்த நடவடிக்கையின் விளைவாக தங்கள் பங்குகளை 10 விழுக்காடு இழக்க வேண்டிய கட்டாயத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் அவர் சொன்னார்.

“2011 டிசம்பர் 31ல் முடியும் நிதி ஆண்டில் MAHB குழுமத்தின் நிகரவருமானத்தில் மாற்றம் இருக்காது எனவும் MAHB அறிவித்துள்ளது. அந்த நிலையில் MAHB குழுமத்திற்கு உள்ள பங்கு ஒவ்வொன்றுக்கும் கிடைக்கும் வருமானம் MAHB பங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது குறைந்து விடும்.”

“MAHB-க்கு ஏற்கனவே 3.1 பில்லியன் ரிங்கிட் கடன் இருக்கும் வேளையில் நிதிகளை திரட்டுவதற்காக புதிய பங்குகள் வெளியிடப்படுகின்றன. அந்த 3.1 பில்லியன் ரிங்கிட்டில் 2.5 பில்லியன் ரிங்கிட் புதிய கேஎல்ஐஏ2ன்  கட்டுமானச் செலவுகளுக்காக எடுக்கப்பட்டு விட்டது,” என்றும் புவா குறிப்பிட்டார்.

2007ம் ஆண்டு அந்த விமான நிலையத்தை நடப்பு விமான நிலையத்துக்கு வடக்கில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. அதன் செலவுகள் 1.7 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது.

ஆனால் அது மேற்குப் பக்கத்துக்கு மாற்றப்பட்டது. அதன் விளைவாக அதன் கட்டுமான செலவு மதிப்பீடுகள் 3.9 பில்லியன் ரிங்கிட்டை எட்டின. அதற்கு விமான நிலையத்துக்குப் பொருத்தமில்லாத சதுப்பு நிலமாகும் என்றார் புவா.

போக்குவரத்து அமைச்சர் செலவுகள் மிதமிஞ்சி கூடியதற்கான காரணத்தைக் கூற வேண்டும். தட்டிக்கழிக்கக் கூடாது என்றும் டிஏபி தேசியப் பிரச்சாரப் பிரிவுச் செயலாளருமான அவர் சொன்னார்.

தற்காப்புத் தளவாடங்கள் கொள்முதல் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளிலும் KR1M என்னும் ஒரே மலேசியா மக்கள் கடைகளில் சுகாதார அம்சங்கள் மீறப்பட்டுள்ளதாக எழுந்த சர்ச்சைகளிலும் முறையே தற்காப்பு அமைச்சர் ஸாஹிட் ஹமிடியும் சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய்-யும் பக்காத்தான் எம்பி-க்களைச் சந்தித்து விளக்கமளித்த பாணியை கோங் பின்பற்ற வேண்டும் என்றும் புவா கேட்டுக் கொண்டார்.

“சந்திப்புக்கான வேண்டுகோள் இன்று அவரது அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அமைச்சரிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றும் அவர் எங்களை வரவேற்பார் என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன்.”

கேஎல்ஐஏ2 கட்டப்படும் இடம் குறித்த முக்கியமான தகவல்களை வெளியிட மறுத்த MAHB மூத்த நிர்வாகிகள் விலக வேண்டும் என ஏற்கனவே புவா கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய கேஎல்ஐஏ2 கட்டுமானம் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.