காலித்: சிலங்கூர் மந்திரி புசாராவதற்கு நான் ஆதரவு தர மறுத்த பின்னர் ஹசான் மாறி விட்டார்

முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினரும் முன்னாள் மாநில பாஸ் ஆணையருமான ஹசான் அலி, மந்திரி புசாராவதற்கு தாம் ஆதரவு தர மறுத்த பின்னர் பெரிதும் மாறி விட்டதாக ஷா அலாம் எம்பி காலித் சாமாட் கூறுகிறார்.

பாஸ் கட்சித் தலைவர்கள் மீதும் பக்காத்தான் ராக்யாட் மீதும் விஷத்தைக் கக்கிய ஹசான் இப்போது நீக்கப்பட்ட பின்னர் அந்தக் கட்சி தனது தொடக்க காலப் போராட்டத்திலிருந்து விலகி விட்டதாக சாடுகிறார் என காலித் தமது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தம்மையும் பாஸ் கட்சியையும் பக்காத்தான் ராக்யாட்டையும் தொடர்ந்து தாக்குவதின் மூலம் ‘gila talak’ (விவாக ரத்துக்குப் பின்னர் கிறுக்குப் பிடிப்பது) ஆகி விட்டார் என்றும் காலித் தமது நீண்ட வலைப்பதிவில் எழுதியுள்ளார்.

1998ம் ஆண்டு ஹசான் பாஸ் கட்சியில் சேர்ந்ததிலிருந்து அவர் சிலாங்கூர் பாஸ் ஆணையாளராக பொறுப்பேற்கும் வரையில் நான் அவரை ஆதரித்தேன். அவருடைய துணை ஆணையாளராகவும் பணி புரிந்தேன் என்றும் காலித் தெரிவித்தார்.

“ஆனால் 2008ம் ஆண்டு ஹசான் மந்திரி புசாராக நியமிக்கப்படுவதற்கு வழி வகுக்கும் அம்னோவுடனான ஒத்துழைப்பை நான் நிராகரித்த பின்னர் எல்லாம் மாறி விட்டது. ஹசான் ஒரு முறை என்னிடம் புதிய மந்திரி புசாராக யார் இருக்க வேண்டும் என வினவினார் என்றும் அதற்கு நான்,” தான் ஸ்ரீ அப்துல் காலித் (இப்ராஹிம்) என்றும் பதில் அளித்தேன்.”

“அவர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய முகத்தில் விரக்தியின் வெளிப்பாடு தெரிந்தது.”

அப்போது முதல் ஹசானுடனான தமது உறவுகள் மாற்றம் காண்பதை தாம் உணர முடிந்ததாக அந்த ஷா அலாம் எம்பி சொன்னார். அத்துடன் அந்த முன்னாள் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் டிஏபி-யையும் பிகேஆர்-ரையும் தாக்கிப் பேசி வந்தார். ஹசானுடனான தமது கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர் 2008ம் ஆண்டு சிலாங்கூர் பாஸ் துணை ஆணையர் பொறுப்பிலிருந்து தாம் நீக்கப்பட்டதாக காலித் தெரிவித்தார்.

“ஒரு கட்டத்தில் 2009ம் ஆண்டு பாஸ் மத்தியக் குழு முன்பு நானும் ஹசானும் நிறுத்தப்பட்டோம். ஆறு மாதங்களுக்கு நான் எல்லாக் கட்சிப் பதவிகளிலிருந்தும் நிறுத்தி வைக்கப்பட்டேன். அதே வேளையில் ஹசானுக்கு எச்சரிக்கைக் கடிதம் மட்டும் கொடுக்கப்பட்டது. ஊடகங்களில் பக்காத்தன் ராக்யாட்டை தாக்குவதை நிறுத்திக் கொள்ளுமாறு மட்டும் அவரிடம் கூறப்பட்டது,” என்றார் அவர்.

காலித்துக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் 2011ம் ஆண்டு பாஸ் மத்தியக் குழுவுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.  வாக்கு எண்ணிக்கையில் அவர் எட்டாவது இடத்தில் இருந்தார். ஆனால் ஹசானுக்கு 16வது இடம்தான் கிடைத்தது.