“கம்யூனிஸ்ட் வீரர்கள்” செய்திக்காக மாட்ச் சாபு உத்துசான்மீது வழக்கு

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, 1950 ஆம் ஆண்டு நிகழ்ந்த புக்கிட் கெப்போங் சம்பவத்தில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்கார்களைத் தாம் புகழ்ந்து பேசியதாக செய்தி வெளியிட்ட உத்துசான் மலேசியாவைக் கடுமையாகச் சாடினார்.

ஆகஸ்ட் 21-இல், பூலாவ் பினாங், தாசெக் குளுகோரில் தாம் ஆற்றிய உரையை அம்னோவுக்குச் சொந்தமான அந்நாளேடு  பெருமளவு திரித்துக்கூறியுள்ளது என்று பெர்லிஸ் பாஸ் தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் முகம்மட் சாபு தெரிவித்தார்.

“என் பேச்சின் ஒலிப்பதிவைத் திரும்பவும் கேட்டு ஆகஸ்ட் 27-இலும் அதற்கடுத்த நாளிலும் உத்துசானில் வெளிவந்த செய்தியுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

“என்னையும் பாஸையும் அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே உத்துசான் அச்செய்தியைத் திரித்துக்கூறியுள்ளது என்று நினைக்கிறேன்”, என முகம்மட் சாபு கூறினார்.

ஹரி ராயா கொண்டாட்டம் முடிந்து, சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தம் வழக்குரைஞர்களைச் சந்திக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘கோ பெங் துன் யார்?’

தமது பேச்சில், முகம்மட் இந்திராவை ஒரு கம்யூனிஸ்ட் என்று குறிப்பிடவே இல்லை என்றும் ஒலிப்பதிவைக் கேட்டு அதை உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் அவர் சொன்னார்.

“(உத்துசான் செய்தியின்படி) கிளர்ச்சிக்காரர்களின் தலைவர் கோ பெங் துன். உத்துசானைப் படித்துத்தான் இதை நான் தெரிந்துகொண்டேன்.”

முகம்மட் இந்திராவை, 1950-இல் புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையம் மீதான கம்யூனிஸ்ட் தாக்குதலுக்குத் தலைமைதாங்கியவர் என்று மாட் சாபு அவரது உரையில் குறிப்பிட்டதாக அச்செய்தி தெரிவித்தது. 

மெர்டேகா வந்தால் புக்கிட் கெப்போங் சம்பவம் குறித்த நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளியேறுகின்றன என்று மாட் சாபு கூறினார்.

அந்நேரத்தில் போலீஸ்காரர்கள் பிரிட்டிஷ் காலனித்துவ எஜமானர்களின் ஏவலாட்களாக இருந்தனர். அந்த வகையில் பார்க்கப்போனால் போலீஸ் நிலையத்தைத் தாக்கியவர்களும் நாட்டின் விடுதலைக்குப் பங்காற்றியவர்களே என்றவர் வாதிட்டார். 

அம்னோவுக்கு அப்பாற்பட்டவர்கள் சுதந்திரத்துக்குப் பங்காற்றிய செய்தியெல்லாம் வரலாற்று நூல்களில் மறைக்கப்பட்டிருப்பதற்கு உதாரணமாக அச்சம்பவத்தை அவர் குறிப்பிட்டார்.

புக்கிட் கெப்போங் சம்பவம், மலாய் தேசியவாதத்துக்கும் கம்யூனிஸ்டு கிளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் மலாய்க்காரர்கள் காட்டிய வீரத்துக்கும் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடப்படுவது வழக்கம்.

அதில் 14 போலீஸ்காரர்களும் அவர்களின் குடும்பத்தினரும்  உள்பட, 25 பேர் பலியானார்கள். அச்சண்டையில் போலீஸ்காரர்களின் மனைவிமாரும் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி மரணமுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்துசானில் மாட் சாபுவின் செய்தி வெளிவந்திருந்த விதம் அவருக்குக் கடுமையான எதிர்ப்பைத் தேடிக்கொடுத்தது. வரலாற்றாசிரியர்களும், போலீஸ்காரர்களும், அத்தாக்குதலில் மாண்ட போலீஸ்காரர்களின் குடும்பத்தினரும் மாட் சாபுவைச் சாடினர்.  

முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மூசா ஹசானும் புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றிருந்த ஜமில் முகம்மட் ஷாவின் புதல்வர் அஹ்மட் ஜமிலும், மாட் சாபுவை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்த் தடுத்து வைக்க வேண்டும் என்றனர். 

அவருக்கு எதிராக 20-க்கு மேற்பட்ட புகார்கள் செய்யப்பட்டிருக்கின்றன.விஷமத்தனமாக பேசியுள்ள அவர்மீது குற்றவியல் சட்டம் பகுதி 505-இன்கீழ் புலன் விசாரணை தொடங்கியிருப்பதை போலீசாரும் உறுதிப்படுத்தினர்.

TAGS: