அம்னோ உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைக் கூறவும் தேவையானால் கட்சியை விமர்சிக்கவும் இடமளிக்க வேண்டும் என்கிறார் அம்னோ உச்சமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் அப்துல் காடிர் ஷேக் பாட்சிர்.
ஆனால், 60ஆம் 70ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த முன்னாள் தலைவர்கள் 10 விழுக்காட்டு அளவுக்குக்கூட அம்னோவை விமர்சிக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று அப்துல் காடிர், ஹராகா, மோப்டி, மலேசியாகினி ஆகியவற்றுக்கு அளித்த நேர்காணலில் கூறினார்.
அப்போது அம்னோ தலைவர்கள் கட்சிக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் துணிச்சலுடன் கருத்துரைப்பார்கள்.சில நேரங்களில் கருத்துகள் காரசாரமாக இருந்ததுண்டு என்றாரவர்.
“ஆனால், அப்போது அம்னோவும் அதன் தலைவர்களும் அம்னோ உண்மையான ஜனநாயகக் கட்சி என்ற உணர்வில் உறுதியாக இருந்தனர். இப்போது அம்னோ தலைவர் நஜிப்பும் மற்றவர்களும் நாடு முழுக்கச் சென்று ‘நாம் மாற வேண்டும், இல்லையேல் மாற்றப்படுவோம்’ என்று சொல்லிவருவதைப் பார்க்கிறோம்”.
அமானா துணைத்தலைவருமான அப்துல் காடிர், 1956இலிருந்து அம்னோவில் பல பொறுப்புகளை வகித்தவர். அரசியல் செயலாளராக, நாடாளுமன்றச் செயலாளராக, துணை அமைச்சராக, அமைச்சராக அவர் இருந்துள்ளார்.
“அதன் பயனாக சிறிதளவு கருத்துரைக்கும் அனுபவமும் அறிவும் எனக்கு இருக்கும் என்பது நிச்சயம்.
“அதனால் என் கருத்துகளைக் கவனத்துடன் ஆராயுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளைக் கேட்டுக்கொள்கிறேன்”, என்றாரவர்.
அம்னோவின் மேன்மைக்காக அவர் முன்வைத்த கருத்துகள் சில:
-கட்சியில் பல்வேறு பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குச் சக உறுப்பினர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற நிலை உள்பட, எல்லாவகை கையூட்டுகளையும் ஊழலையும் ஒழித்துக்கட்ட வேண்டும்.
-நல்ல பெயர் வாங்கவும் எதிர்வரும் தேர்தலில் வாக்குகளைப் பெறவும் மக்களுக்குக் கையூட்டு கொடுப்பதை நிறுத்த வேண்டும்.மக்களை ஊழலுக்கு உடந்தையாக்கி அவர்களின் நற்பண்புகளைச் சிதைத்துத்தான் நல்ல பெயர் வாங்க வேண்டும், தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில்லை. அதற்கு வேறு வழிகள் இருக்கின்றன.
“நம் நாட்டு மக்கள் மட்டுமல்ல, பன்னாட்டுச் சமூகமும் நம் செயல்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்”.
பூமிபுத்ராக்களுக்கான சமூக-பொருளாதாரத் திட்டங்கள் உண்மையாகவே அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அப்துல் காடிர் வலியுறுத்தினார்.
“பூமிபுத்ராக்களின் சமூக-பொருளாதார நிலையை அதற்குரிய நியாயமான அளவுக்கு உயர்த்த முடியாமல் போனதற்கு சீனச் சமூகத்தையோ சீனர்களின் அரசியல் கட்சிகளையோ குறை சொல்லக்கூடாது. அதைச் செய்வதற்கு 50ஆண்டுகளுக்குமேல் நமக்கு அவகாசம் இருந்தது”, என்றாரவர்.
தம் நேர்காணலைத் தேடிப் பார்க்க வேண்டிய அவசியத்தை அம்னோ ஒழுங்குக் குழுவுக்கு வைக்கப்போவதில்லை என்று அப்துல் காடிர் குறிப்பிட்டார். ஏனென்றால் நேர்காணலின் முழு வடிவத்தையும் அவர் அம்னோவுக்கு அனுப்பி வைக்கப்போகிறார்.