“என்எப்சி ஒப்பந்தத்தை நஜிப், முஹைடின் பகிரங்கமாக்க வேண்டும்”

என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட கடன் ஒப்பந்தத்தை பிரதமரும் துணைப் பிரதமரும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என பிகேஆர் விரும்புகிறது.

‘என்எப்சியை சூழ்ந்துள்ள எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் பொருட்டு, பிரதமர் நஜிப் ரசாக்கும் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் 250 மில்லியன் ரிங்கிட் கடன் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை பகிரங்கமாக வெளியிடுமாறு நிதி அமைச்சு, விவசாய அமைச்சு, என்எப்சி ஆகியவற்றுக்கு ஆணையிட வேண்டும் என நான் யோசனை கூறுகிறேன். அப்போதுதான், அத்தகைய எளிய நிபந்தனைகளுடன் கூடிய கடனை அரசாங்கம் வழங்கியது நியாயமா என்பதைப் பொது மக்கள் தீர்ப்புச் சொல்ல முடியும்,” என பிகேஆர் வியூக இயக்குநருமான ராபிஸி இஸ்மாயில் கூறினார்.

கால் நடை வளர்ப்புக்கான அந்த 250 மில்லியன் ரிங்கிட் கடன் எதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என நிதி அமைச்சு நிபந்தனைகள் ஏதும் விதிக்கவில்லை என என்எப்சி தலைமை நிர்வாக அதிகாரி வான் ஷாஹினுர் இஸ்மிர் சாலே கூறியுள்ளது பற்றி ராபிஸி கருத்துரைத்தார்.

“ஆடம்பர அடுக்குமாடி வீடுகள், நிலம், ஆடம்பரக் கார் போன்ற அதிக விலையுள்ள சொத்துக்களை சேர்ப்பது உட்பட தனிப்பட்ட நோக்கங்களுக்காக” அந்தக் கடன் எப்படிப் பயன்படுத்தப்பட முடியும்  என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“அவர் கூறிக் கொள்வது ஆயிரம் கேள்விகளை எழுப்பியுள்ளது,” என ராபிஸி குறிப்பிட்டார்.

என்எப்சி  சம்பந்தப்பட்ட பல “ஊழல்களை” அம்பலப்படுத்தும் பணியில் ராபிஸி முன்னிலை வகிக்கிறார்.

ஒர் அமைச்சரது குடும்பத்துக்கு “விருப்பம் போல் செலவு செய்வதற்கு” இவ்வளவு பெரிய கடனை   அமைச்சர்கள் எப்படி அங்கீகரித்தனர் என்ற கேள்வியும் அதில் ஒன்று என்றார் ராபிஸி.