பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மான்சோருக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கர்ட்டின் பல்கலைக்கழகம் ( Curtin University ) இந்த வார இறுதியில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கவிருக்கிறது.
அந்தத் தகவலை நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகமட் ஹசான் இன்று வெளியிட்டார்.
“அவரைப் பற்றி தவறான விஷயங்களை சொல்லும் மக்களும் இருக்கின்றனர். ஆனால் ஆஸ்திரேலியா போன்ற மற்ற நாடுகளில் உள்ளவர்கள் அவருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி எப்படிச் சிறப்பிக்கின்றனர் எனப் பாருங்கள் என அவர் ராஹாங், சிரம்பானில் ஈராயிரம் பேர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் கூறினார்.
இன்று பின்னேரம் நஜிப்பும் ரோஸ்மாவும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்ட்டின் பல்கலைக்கழகத்துக்கு பெர்த்-திலும் சிட்னியிலும் மொத்தம் இரண்டு வளாகங்கள் இருப்பதால் எங்கு ரோஸ்மாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்படவில்லை.
இன்று பிற்பகல் தாமான் தேசா ரூ-வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமது நிகழ்ச்சி ஒன்றை ரத்துச் செய்து விட்டு கோலாலம்பூருக்குத் திரும்புவதாகவும் முகமட் சொன்னார்.
BR1M என்ற ஒரே மலேசியா மக்கள் உதவித் திட்டத்தின் கீழ் 500 ரிங்கிட் ரொக்கம் கொடுக்கப்படுவது குறித்து மலேசியர்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் அதனை வரவேற்பதாகவும் அந்த நிகழ்வில் உரையாற்றிய நஜிப் தெரிவித்தார்.
“அந்தப் பணத்தைக் கொடுப்பதற்கு நாங்கள் உலக வங்கியிடமிருந்து கடன் வாங்கியதாக எதிர்க்கட்சிகள் சொன்னால் அது எதிர்க்கட்சிகளுடைய கற்பனைக் கதை,” என்றார் அவர்.
“நாங்கள் கிரீஸைப் போன்றவர்கள் அல்ல”, என நஜிப் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் பெற்றுள்ள அந்த நாட்டின் கடன்கள் உலகப் பொருளாதாரங்களை நிலை தடுமாறச் செய்துள்ளது.
ராஹாங்கில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு வீட்டுடைமைப் பத்திரங்களையும் ரொக்க நன்கொடைகளையும் வழங்குவதற்காக நஜிப் நெகிரி செம்பிலானுக்கு சென்றிருந்தார்.