டான்: WHO-அளவைவிட குறைவாக செலவிடும்போது 1பராமரிப்புத் திட்டம் எதற்காக?

அரசாங்கம் முன்வைத்துள்ள கட்டாய சுகாதாரக் காப்புறுதித் திட்டமான 1பராமரிப்பு, ஏற்கனவே கண்டனத்துக்கு இலக்காகியுள்ள வேளையில் இப்போது பன்னாட்டு அளவில் நிரணயிக்கப்பட்டுள்ள சில மதிப்பீட்டுஅளவுகளுடன் ஒப்பிடப்பட்டு மேலும் குறைகூறப்பட்டுள்ளது.

பிகேஆரின் சுகாதாரப்பராமரிப்பு மீதான பேச்சாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் டாக்டர் டான் கீ குவோங், சுகாதாரப் பராமரிப்புக்காக உலக சுகாதார நிறுவனம்(WHO ) பரிந்துரைத்துள்ள தொகையைவிட அரசாங்கம் குறைவாகவே செலவிடுகிறது என்கிறார்.

“உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டின் மொத்த உற்பத்தி (ஜிடிபி)யில் 5 விழுக்காட்டை சுகாதாரப் பராமரில்லுக்குச் செலவிட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது”, என்று மருத்துவரான டான் கூறினார். டான், முன்னாள் கெராக்கான் எம்பி. பிஎன் அரசில் துணை அமைச்சராக இருந்தவர். 2008-இல், பிகேஆரில் சேர்ந்தார். 

“இப்போது அரசாங்கம் ஜிடிபியில் 2விழுக்காட்டைத்தான் சுகாதாரப் பராமரிக்குச் செலவிடுகிறது.இது WHO பரிந்துரைத்த அளவைவிட மிகவும் குறைவு.

“இதை அரசாங்கம் 5%ஆக உயர்த்த முடியாமல் இருப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை. நீர்மூழ்கிகள், கவச வாகனங்கள் போன்ற தேவையில்லா பொருள்களை வாங்குவதற்குச் செலவிடும் பணத்தை முன்னுரிமைக்குரிய திட்டங்களான சுகாதாரப் பராமரிப்பு போன்றவற்றுக்குத் திருப்பி விடலாமே”, என்று டான் வலியுறுத்தினார்.

எல்லாவற்றையும் தனியார்மயமாக்குதல் தீர்வாகாது என்று குறிப்பிட்ட டான் மருத்துவக் கழிவுப் பொருள் ஒழிப்பைத் தனியார்மயமாக்கியதில் கிட்டிய அனுபவத்தை அரசு நினைத்துப்பார்க்க வேண்டும் என்றார்.

சில ஆண்டுகளுக்குமுன் மருத்துவக் கழிவுகளை அகற்றும் பொறுப்பு தனியார்மயப்படுத்தப்பட்டு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இப்போது அந்நிறுவனம்  ஏற்கனவே, கழிவை அகற்ற அரசாங்கம் செலவிட்டதைவிட மும்முடங்கு அதிகமான தொகையைக் கட்டணமாகக் கோருகிறது.

“இந்த அனுபவத்திலிருந்தே, நமது சுகாதாரப் பராமரிப்பில் உள்ள குறைபாடுகளுக்கு தனியார்மயம் தீர்வல்ல என்பதை அரசாங்கம் உணர்ந்திருக்க வேண்டும்”. 

சுகாதார அமைச்சு முன்மொழிந்துள்ள இப்புதிய திட்டத்தை அமைச்சில் உள்ள நிபுணர்களே வரவேற்கவில்லை என்று அரசாங்க வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்திருப்பதாக டான் தெரிவித்தார்.செல்வாக்குமிக்க சிலர்தான் இத்திட்டத்தை வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது.

இத்திட்டம் தனியார்துறையில் உள்ள தங்களுக்கு வேண்டியவர்கள் ஆதாயம் பெற உதவும் என்பதால்  அவர்கள் இத்திட்டத்தை வலியுறுத்தி வருகிறார்கள் என்றாரவர்.