பொதுத் தேர்தலில் பிஎன் அரசாங்கத்தின் பிடி தளருமானால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சிலராவது கட்சி தாவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று பங்சாரில், பொதுக்கொள்கை ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் பேசிய கெராக்கான் இளைஞர் தலைவர் லிம் சி பின், தீவகற்பத்தில் பிஎன் கூடுதல் இடங்களை இழக்கும் பட்சத்தில் கட்சித்தாவல் “நிகழலாம்” என்றார்.
“அரசியலில் நிலைத்திருப்பதுதான் முக்கியம்.எம்பி ஆக நீங்களும் உங்கள் கட்சியும் பிழைத்திருக்க வேண்டும்.தீவகற்ப மலேசியாவில் பிஎன் வெற்றி ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்கப் போதுமானதாக இல்லை என்கிறபோது எம்பிகள் புதிய கூட்டணிக்குத் தாவும் நிலை உருவாகலாம்”, என்றாரவர்.
அப்படிப்பட்ட நிலையில் சாபா, சரவாக்கிலும் கட்சித்தாவல்கள் நிகழலாம் எம்று லிம் கூறினார்.
“சாபா, சரவாக்கை வைப்புத்தொகைபோல் பாதுகாப்பானவை என்று நினைத்துக்கொண்டிருக்க முடியாது. ஒவ்வொருவரும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் முனைவார்கள்.”
அவரது கூற்றை ஒப்பிய கருத்தரங்கின் சக பேச்சாளரும் அரசியல் ஆய்வாளருமான இங் கியான் மிங், இரு தரப்புகளும் 55விழுக்காட்டுக்கும் குறைவான இடங்களைப் பெறும் பட்சத்தில் “தவளைகளைத் தேடும்பணி தொடரும்”, என்றார்.
“பக்காத்தான் தீவகற்பத்தில் பெரும்பான்மையான இடங்களை வென்றால், சரவாக்கில் பிபிபி-இல் இல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் சாபாவில் அம்னோ-அல்லாத பிரதிநிதிகளையும் தன் பக்கம் இழுக்கப் பார்க்கும்.
“அதேபோல் பிஎன் வெற்றி பெற்றால், பக்காத்தான் எம்பிகளை இழுத்துக்கொள்ள முயலும்”.ஆனால், பிஎன் 65,70விழுக்காடு வெற்றி பெற்றால் அதில் உள்ள எம்பிகளைத் தம் பக்கம் இழுக்க அன்வார் தீவிரம் காட்ட மாட்டார். செப்டம்பர்16 அனுபவத்தை அவர் மறந்திருக்க மாட்டார் என்று ஒங் கூறினார்.
அம்னோவில் தலைவர் பதவிக்காகத் துணைப்பிரதமர் முகைதின் யாசின், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்க்க முனைந்தால் அங்கு உள்ளுக்குள் சச்சரவு மூளும். அப்படி ஒரு நிலை உருவானால் அதைப் பயன்படுத்திக்கொண்டும் அம்னோவில் உள்ளவர்களைப் பக்காத்தான் தன் பக்கமாக இழுக்கப் பார்க்கலாம்.
முன்னதாக கெராக்கான் கட்சியினரான லிம், அரசியல் எல்லையைக் கடந்து பக்காத்தான் எம்பிகளுக்காக பரிந்து பேசினார். பக்காத்தான் எம்பிகள் தங்கள் தொகுதிகளுக்குச் சேவைசெய்ய கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து நிதி ஒதுக்கீடு கிடைப்பதில்லை என்றாரவர்.
2008-இல் பத்து தொகுதியில் தம்மைத் தோற்கடித்தவரும் பிகேஆர் உதவித் தலைவருமான தியான் சுவாவுக்கு “டிபிகேஎல் ஆதரவு கிடைப்பதில்லை” என்றார்.
பிஎன்னில் உள்ளுக்குள் “உருமாற்றங்கள்” நிகழ வேண்டும் என்று வலியுறுத்திய லிம், பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் பிஎன் செய்த தவறுகளை அது தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுரையும் கூறினார்.
“நாங்கள் ஒரு கூட்டணி அரசாங்கம்….. ஆனால், எந்தவொரு விசயத்திலும் ஒரு மனிதர்தான் முடிவெடுக்கிறார். கூட்டணி சேர்ந்து முடிவு செய்வதில்லை.
“பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், ஒரு தனிக்கட்சி மட்டுமே அதிகாரம் செலுத்த அனுமதிக்காதீர்கள். பலரும் சேர்ந்து முடிவு செய்யுங்கள்…ஒருவர் அல்லது இருவர் மட்டுமே அதிகாரம் செலுத்த இடமளித்து விடாதீர்கள்”, என்றவர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர் இத்தனை மனக்குறைகளுடன் கெராக்கான் ஏன் இன்னமும் பிஎன்னில் இருக்கிறது என்று வினவ அதற்கு லிம், பிஎன் நிறுவனக் கட்சிகளில் ஒன்றான கெராக்கானை அதிலிருந்து விலகுமாறு கூறுவது சரியல்ல என்றார்.
“துன் ரசாக் (பிஎன்னை உருவாக்க நினைத்தபோது)முதன்முதலில் (காலம்சென்ற) லிம் சொங் இயு-வுடன்தான் கலந்து பேசினார்.கெராக்கான் எதற்காக பிஎன்னைவிட்டு விலக வேண்டும்.
“1974-இல் பிஎன்னுக்காக என்னென்ன விதிமுறைகள் உருவாக்கப்பட்டனவோ அவற்றைப் பின்பற்றாதவர்கள்தான் விலக வேண்டும்.அவர்கள் யார் என்பதை நான் சொல்ல மாட்டேன்.ஆனால், 1974-இல் ஒரு கட்சிக்கு ஒரு வாக்கு என்பதுதான் விதியாக இருந்தது”, என்றார்.
கருத்தரங்கில் கலந்துகொண்ட பேச்சாளர்களில் ஒருவர் வழக்குரைஞர் மன்ற மனித உரிமைக் குழுத் தலைவர் எண்ட்ரு கூ. மக்கள்தொகையில் 30 விழுக்காட்டினரால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு சட்டப்பூர்வமான அரசாக முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“ஆட்சி செய்யப்போவது யார் என்பதை 30விழுக்காட்டினர் மட்டுமே முடிவுசெய்ய அனுமதித்தால் அது சட்டப்படி அமைந்த அரசுதானா என்ற கேள்வி எழும். அது, அவர்களுக்கு ஆளும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தமாகுமா?”என்றவர் வினவினார்.