வாடிக்கையாளர் ஒருவரை ஐசிட்டி கேஎப்சி ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படும் இரண்டு வீடியோக்களை யூ டியூப் இணையத் தளத்தில் சேர்த்த Jess6366 என்ற கணக்குக்குப் பின்னணியில் உள்ள நபர் அந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அடையாளம் கூறவும் படம் எடுக்கவும் விரும்பாத அவர், சம்பவம் நிகழ்ந்த போது, தாக்கப்பட்டதாகக் கூறப்படும் டேனி இங் நின்று கொண்டிருந்த அதே வரிசையில் நின்று கொண்டிருந்ததாக சொன்னார்.
“அப்போது இரவு மணி 9.30 இருக்கும். குறைவான நபர்களுடன் இன்னொரு வரிசை இருப்பதைப் பார்த்தேன். அதனால் அதற்கு மாறிக் கொண்டேன்.என் வரிசையில் ஐவர் இருந்தனர். இங் வரிசையில் 10 பேர் இருந்தனர்.”
“என்னுடைய முறை வந்த போது கிட்டத்தட்ட இரவு மனி 10.45 ஆகி விட்டது. இங்-கிற்கு முன்னர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரது முறை வந்த போது சிக்கன் இல்லை. காரணம் கடைசி சிக்கன் எனக்குத் தரப்பட்டு விட்டது.” அவர் இன்று கிள்ளானில் நிருபர்களிடம் பேசினார்.
சிக்கன் முடிந்து விட்டது என வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கத் தவறி விட்டதாக இங் நிர்வாகியிடம் கோபமாகக் கூறினார். ஊழியர்களிடமும் சத்தம் போட்டார்.
ஒர் ஊழியர் இங்-கை ‘பன்றி’ என அழைத்து சொந்தமாக சிக்கனை வறுத்துக் கொள்ளுமாறு கூறியதைத் தவிர வேறு எந்த ஆபாசமான வார்த்தைகளையோ இன அவமானச் சொற்களையோ இரு தரப்பும் பயன்படுத்தவில்லை என்றார் அவர்.
ஊழியர் அவரை ‘பன்றி’ என அழைத்தார். ஆனால் இங் இனவாத வார்த்தை எதனையும் சொல்லவில்லை. ஆனால் அவர் உரத்த குரலில் பேசினார். அவர் ஊழியரை நோக்கி சத்தமாக பேசியது காரணமாக இருக்கலாம்,” என்றார் வீடியோவைச் சேர்த்த அவர் சொன்னார்.
சிகாம்புட் எம்பி லிம் லிப் எங், ஷா அலாம் எம்பி காலித் சாமாட் ஆகியோருடன் வந்த அவர், தமது புதல்வி அணிந்திருந்த சிவப்புத் தொப்பியையும் கொண்டு வந்திருந்தார். அந்தத் தொப்பி அந்த வீடியோவில் காணப்பட்டது.
தமது புதல்வி, “வேகமாக சென்ற இன்னொரு வரிசையில்” நின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“நான் அந்த வீடியோவை எடுக்க எண்ணவில்லை. நான் தொலைபேசியில் பேச எண்ணியிருந்தேன். நடப்பதைப் பார்த்ததும் வீடியோவில் பதிவு செய்ய முடிவு செய்தேன்.”
‘நிர்வாகி கைகலப்பை தவிர்த்திருக்க முடியும்’
இரண்டாவது வீடியோவின் தொடக்கத்தில் “மூர்க்கத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம்” என ஊழியர் உரத்த குரலில் சொன்னதற்கு ” சிக்கன் இல்லையென்றால் அதனைச் சொல்ல வேண்டியது தானே,” என உரத்த குரலில் கூறியது காரணமாக இருக்கலாம் என்றார்.
“ஆனால் இனத் துவேஷ வார்த்தை எதுவும் சொல்லவில்லை,” என அவர் வலியுறுத்தினார்.
என்றாலும் நிலைமை குறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்கத் தவறியதாக அந்த கேஎப்சி கடையின் நிர்வாகியைக் குறை கூறினார். அவர் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.
“அந்த நிர்வாகி முன் வந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது,” என்றார் அவர். அந்தச் சம்பவம் தனது 11 வயது புதல்விருக்கும் 8 வயது புதல்வருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் சொன்னார்.
கேஎப்சி கடைகளில் சேவை குறிக்கப்பட்ட இலக்கில் இல்லை எனக் கூறிக் கொண்ட அவர் அதனால் நிர்வாகம் மீது நெருக்குதல் தொடுப்பதற்காக அந்த வீடியோக்களை யூ டியூப்பில் சேர்த்ததாகவும் சொன்னார்.
சமையல் கூடத்தில் இருந்த ஊழியர்கள் சூடான சூழ்நிலையில் இருந்தனர். அதே வேளையில் நான்கு முதல் ஐந்து வரிசைகளாக நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் பொறுமை இழந்த நிலையில் இருந்தார்கள் என்றார் அவர்.
போலீசில் புகார் செய்யப் போவதாக இங் மருட்டியதும் ஊழியர்களுடைய ஆத்திரம் அதிகரித்தது என்றும் அவர் தெரிவித்தார்.
“நான்கு முதல் ஐந்து பேர் வெளியில் வந்தனர். ஆனால் சமையல் அறையிலிருந்து வந்த ஒருவர் மிகவும் வன்முறையாக செயல்பட்டார்,” என்று கூறிய அவர், இங்-கை அவர் தாக்குவதைத் தடுக்க அவரது சக ஊழியர்கள் சிலர் முயன்றதாகத் தெரிவித்தார்.
அவர்களில் ஒருவரிடம் இரும்புக் கம்பி இருந்தது என்ற அவர்,” அந்த கேஎப்சி கடையின் கேமிரா ஒளிப்பதிவுகளைப் பார்க்க வேண்டும்,” என்றார்.
அது இனவாதம் அல்ல. வெறும் சிக்கன்”
அந்தச் சம்பவம் பற்றிக் கருத்துரைத்த ஷா அலாம் எம்பி காலித் சாமாட், அந்த விவகாரத்தை இனப் பிரச்னையாக்க மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் மலேசியர்கள் நிராகரிக்க வேண்டும் என்றார்.
வாடிக்கையாளர்கள் புகார் செய்ய விரும்பினால் ஆத்திரப்படாமல் உடனடியாக அதனைச் செய்ய வேண்டும் என அவர் அறிவுரை கூறினார்.
என்றாலும் கேஎப்சி ஊழியர்களுடைய வன்முறைகளை இது நியாயப்படுத்த முடியாது என்றார் அவர்.
“வாடிக்கையாளர்கள் புகார் செய்தால் அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். அவர்களால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாவிட்டால் பின்னுக்குச் சென்று விட வேண்டும். ஊழியர்களுடைய நிலமையையும் வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”