டிவிட்டர் தகவல் தொடர்பில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பத்திரிக்கையாளர் ஹம்சா காஷ்ஹாரி-யை அதிகாரிகள் நாடு கடத்துவதைத் தடுக்கும் முயற்சியில் மனித உரிமை போராளிகள் தோல்வி கண்டுள்ளனர்.
இன்று காலையில் அந்தப் பத்திரிக்கையாளர் நாடு கடத்தப்படுவதை நிறுத்தும் இடைக்கால நீதிமன்ற உத்தரவை அதிகாரிகளிடம் வழங்குவதற்கால வழக்குரைஞர்கள் சுபாங் விமான நிலையத்துக்கு விரைந்து சென்றனர்.
அந்தப் பத்திரிகையாளர் அங்கு இல்லை என்பதை அறிந்த மனித உரிமைப் போராளிகள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கு சென்றனர். ஆனால் எல்லாம் தாமதமாகி விட்டது.
வழக்குரைஞர் பாடியா நாட்வா பிக்ரி அனுப்பியுள்ள டிவிட்டர் தகவலின் படி தேசிய துணைப் போலீஸ் படைத் தலைவர் உடன் செல்ல இன்று காலை 10 மணிக்கு சவூதி விமானம் ஒன்றில் அவர் நாடு கடத்தப்பட்டு விட்டார்.
எந்த விதமான விவரங்களும் பதிவு செய்யப்படாமல் ஹம்சா வெளியேற்றப்பட்டதாக கேஎல்ஐஏ குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
இதற்கு முன்னர் ஏஎப்பி செய்தி நிறுவனத் தகவல் ஒன்று, ஹம்சா ஏற்கனவே நாடு கடத்தப்பட்டு சவூதி அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் தெரிவித்தது.
டிவிட்டர் பதிவு ஒன்றில் இஸ்லாத்தை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுவது மீது ஹம்சாவைத் தடுத்து வைக்குமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் மலேசிய அதிகாரிகள் அவரை தடுத்து வைத்திருந்தனர்.
நியூசிலாந்தில் அரசியல் அடைக்கலம் கோரும் பொருட்டு அங்கு செல்லும் வழியில் அவர் மலேசியாவுக்கு வந்ததாக நம்பப்படுகிறது
சவூதி அரேபியாவில் அவருடைய டிவிட்டர் தகவல் கடுமையாகக் குறை கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் அந்த செய்தியை நீக்கி விட்டார்
இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. அவரை சமய நம்பிக்கையற்றவர் என அந்த நாட்டின் உயர் நிலை சமய அறிஞர்கள் பிரகடனம் செய்தனர். அவர் தூக்கிலிடப்பட வேண்டும் என்ற நெருக்குதலும் அதிகரித்தது.
சவூதி அரேபியாவில் சமய நிந்தனைக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
ஹம்சாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடிய நாடு ஒன்றுக்கு திருப்பி அனுப்பியதின் மூலம் மலேசிய அரசாங்கம் அவரைப் பாதுகாக்கத் தவறி விட்டதாக மனித உரிமைப் போராளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.