குண்டர்கள் தாக்கியதால் இன்னொரு செராமா நிகழ்வு நிறுத்தப்பட்டது

கல்வித் துறை சுதந்திரம் மீது நேற்றிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செராமா நிகழ்வு ஒன்று ரௌடிகளினால் நிறுத்தப்பட்டது.

கிள்ளான் கம்போங் இடாமானில் அந்த நிகழ்வு நடத்தப்படவிருந்த இடத்தை அந்த ரௌடிகள் நாசப்படுத்தியதுடன் அதனைச் சூழ்ந்தும் கொண்டனர்.

அந்த “குண்டர்கள்” செராமா தொடங்குவதற்கு முன்னதாக அந்த பல நோக்கு மண்டபத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளை உடைத்து அவற்றை தூக்கி எறிந்தனர் என தொடர்பு கொள்ளப்பட்ட போது எஸ்எம்எம் Solidariti Mahasiswa Malaysia அமைப்பின் தலைவர் அகமட் சுக்ரி அப்துல் ராசாப் கூறினார்.

“அவர்கள் அந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டனர். நிலைமை அமைதியாகும் வரை காத்திருக்கும் வேளையில் நாங்கள் அருகில் உள்ள உணவுக் கடை ஒன்றில் தஞ்சம் புக வேண்டியிருந்தது.”

கிட்டத்தட்ட 70 பேரடங்கிய அந்தக் கும்பல் விட்டுக் கொடுக்க மறுத்ததால் 15 மாணவர்கள் பண்டமாரான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றார் அவர்.

“நாங்கள் இரவு மணி 10.30 வாக்கில் பண்டமாரான் போலீஸ் நிலையத்தை அடைந்தோம். அந்தக் குண்டர்கள் எங்களைப் பின் தொடர்ந்தனர். பின்னர் அங்கு தங்களது மோட்டார் சைக்கிள்களுடன் அங்கு ஒன்று கூடத் தொடங்கினர்.”

கிள்ளானில் இரண்டாவது முறையாக செராமா நிகழ்வு ஒன்றுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜாலான் கெபுனில் அபு எனப்படும் அம்னோவைத் தவிர வேறு எதுவாகும் இருந்தாலும் பரவாயில்லை என்னும் அமைப்பு ஏற்பாடு செய்த செராமா நிகழ்வை ரௌடிக் கும்பல் ஒன்று சீர்குலைத்தது. அந்தச் சம்பவத்தில் ஒர் இளைஞரை அந்தக் கும்பல் தாக்கியதாகக் கூறப்பட்டது.

கற்களையும் கம்புகளையும் கொண்டு தாக்கினர்”

நிலைமை பதற்றமாக இருந்ததால் புகார் செய்வதற்கு மாணவர்களை கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்ல பண்டமாரான் போலீசார் முடிவு செய்தனர்.

“நாங்கள் சென்ற ஐந்து கார்களுக்கு துணையாக மூன்று போலீஸ் கார்கள் வந்தன. ஆனால் நாங்கள் வெளியில் வந்ததும் அந்தக் கும்பல் எங்கள் கார்கள் மீது கற்களையும் கம்புகளையும் வீசியது.”

“நல்ல வேளையாக கார் கண்ணாடிகள் உடையவில்லை. என்றாலும் ஒரு கார் கடுமையாக சேதமடைந்தது.”

கிள்ளான் போலீஸ் தலைமையகத்துக்கும் மாணவர்கள் அந்தக் குண்டர்கள் பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் எண்ணிக்கை 100ஆக அதிகரித்தது என்றும் சுக்ரி கூறிக் கொண்டார்.

“நாங்கள் போலீஸ் புகாரைச் செய்த பின்னர் எங்கள் பாதுகாப்புக்காக போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே போக வேண்டாம் என எங்களுக்கு அறிவுரை கூறப்பட்டது.”

“அதிகாலை 4 மணிக்குக்  கூட குண்டர்கள் வெளியில் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் உள்ளூர் மக்களுடைய உதவியுடன் இன்னொரு கதவு வழியாக தப்பித்துச் சென்றோம்.”

எந்த விதமான அசம்பாவிதமும் இல்லாமல் மாணவர்கள் வெளியேறி விட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை  என்றும் சுக்ரி சொன்னார்.

கல்வித் துறைச் சுதந்திரம் நாடி நாடு முழுவதும் மாணவர்கள் நடத்தும் விளக்கக் கூட்டங்களின் ஒரு பகுதியாக நேற்றிரவு அந்தச் செராமாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் நிகழ்வு ஒன்றுக்கு இடையூறு செய்யப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும்.