டியுஎம்சி-யை மூடப்போவதாக சொல்லப்படுவதற்கு எம்பிபிஜே மறுப்பு

டமன்சாரா உத்தாமா மெத்தடிஸ்ட் தேவாலயத்தை மூடுவதற்குத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுவதை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் மறுக்கிறது.

அதற்கான உத்தரவு எதனையும் தாம் பெறவில்லை என்று அதன் அமலாக்க மற்றும் பாதுகாப்புத் துறை துணை இயக்குனர் துன் முகமட் இஸ்லிசாம் பஹார்டின் தெரிவித்தார்.

“அதன் தொடர்பில் உத்தரவு எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை”, என்றாரவர். 

சமூக மையத்துகாக ஒதுக்கப்பட்ட இடத்தில் டியுஎம்சி கட்டப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்படுவதாக குறுஞ்செய்தி ஒன்று பரவி வருகிறது.

மற்ற அமலாக்கப் பிரிவுகள் அப்படிப்பட்ட நடவடிக்கைக்குத் திட்டமிட்டு வருகின்றனவா என்பது தமக்குத் தெரியாது என்றும் இஸ்லிசாம் கூறினார்.

வழிபாட்டு இட விவகாரங்கள் மன்றத்தின்கீழ் வரமாட்டா என்றாரவர்.

“அவ்விவகாரம் எங்கள் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது.”

மாநில அரசில் உள்ள ஒரு சிறப்புக்குழுதான் அவற்றைக் கவனிக்கும் என்று இஸ்லிசாம் தெரிவித்தார்.

டியுஎம்சி அலுவலகத்தைத் தொடர்புகொண்டு வினவியதற்கு அதற்கும் எதுவும் தெரியவில்லை.  தேவாலயத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று கூறிய அது அதன் தொடர்பில் தங்களுக்குத் தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியது.

ஆகஸ்ட் 3-இல், அங்கு நிகழ்ந்த ஒரு விருந்துநிகழ்ச்சியில் சிலாங்கூர் சமயத் துறை(ஜயிஸ்) அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியதை அடுத்து டியுஎம்சி-யின் பெயர் பிரபலமானது.

அவ்விருந்து நிகழ்வில் 12 முஸ்லிம்கள் கலந்துகொண்டிருந்ததை வைத்து, விருந்தை ஏற்பாடு செய்த ஹராபான் கம்முனிடி மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஜயிஸ் குற்றம் சாட்டியது.

அதை மறுத்த ஹராபான் கம்முனிடி, அது ஏய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவும் ஒரு நிதிதிரட்டு நிகழ்வு என்று கூறியது. ஆம் அதுதான் உண்மை என்று மலேசிய ஏய்ட்ஸ் மன்றமும் அதற்குப் பரிந்து பேசியுள்ளது.