பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உட்பூசலுக்கு முடிவு கட்டுங்கள் என ஸாஹிட் பிஎன் -னுக்கு அறிவுரை

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிசான் நேசனல் (பிஎன்) தனது  தோற்றத்தையும் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களுடைய தோற்றத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கு இன்னும் நிறைய கால அவகாசம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறுகிறார்.

எனவே கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலும் தலைவர்களுக்கு இடையிலும் நிலவுகின்ற உட்பூசல் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் கட்சி வலுவடையும் என்றார் அவர்.

“நாம் உட்பூசல்களைத் தீர்ப்பதற்கு வேகமாகச் செயல்பட வேண்டும். நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் கலைக்கப்படும் வரையில் நாம் அந்த நிலை நீடிக்க அனுமதிக்கக் கூடாது.”

அவர் நேற்று உலு சிலாங்கூரில் பெல்டா கெடாங்சா தேசிய இடைநிலைப் பள்ளியில் பெல்டா பிரதேச இராணுவப் பிரிவைத் தொடக்கி வைத்த பின்னர் அகமட் ஸாஹிட் நிருபர்களிடம் பேசினார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கான வாக்காளர்களில் 38.8 விழுக்காட்டினர் 40 வயதுக்கும் அதற்கும் கீழ்ப்பட்டவர்கள். அவர்களுடைய ஆதரவை பிஎன் மீண்டும் பெறுவதற்கு முயற்சிகள் செய்யப்பட வேண்டும் என அவர் விரும்புகிறார்.

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற பிஎன் உறுப்புக் கட்சிகள் ஒன்றுபட்டு கடுமையாக உழைக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் டைம் ஜைனுடின் கேட்டுக் கொண்டுள்ளது பற்றி அகமட் ஸாஹிட் கருத்துரைத்தார்.

பிஎன் உயிர் வாழ்வது குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ள மூத்த அரசியல்வாதி ஒருவருடைய உண்மையான நினைவூட்டல் என்றும் அவர் அதனை வருணித்தார்.

கட்சியையும் நாட்டையும் ஐக்கியப்படுத்தவும் அம்னோ/பிஎன் மீது மக்கள் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தவும்  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் அயறாத பாடுபட்டு வருகின்றனர் என்றும் அகமட் ஸாஹிட் கூறினார்.

பெர்னாமா

TAGS: