ஹிஷாம்: தேடப்படுகின்றவர்களுக்கு மலேசியா பாதுகாப்பான சொர்க்கம் அல்ல

தங்கள் சொந்த நாடுகளில் தேடப்படுகின்றவர்களுக்கு மலேசியா பாதுகாப்பான சொர்க்கபுரியாக கருதப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே சவூதி அரேபியப் பிரஜையான ஹம்சா காஸ்ஹாரியை திருப்பி அனுப்ப அரசாங்கம் முடிவு செய்ததாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார்.

“தங்கள் சொந்த நாடுகளில் தேடப்பட்டுகின்றவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பான சொர்க்கபுரியாகவும் இடையில் தங்கிச் செல்லும் நாடாகவும் மலேசியா கருதப்படுவதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்.”

ஹிஷாமுடின் இன்று சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் அனைத்துலக மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களைச் சந்தித்தார்.

ஹம்சா திருப்பி அனுப்பப்படுவதை நிறுத்துவதற்கு நீதி மன்ற தடை உத்தரவு பெறப்பட்டதாகக் கூறப்படுவதை ( அந்தச் செய்தி இணையத்தில் காட்டுத் தீ போல பரவியது) உள்துறை அமைச்சர் மறுத்தார்.

“நான் எந்தத் தடை உத்தரவையும் பெறவில்லை. நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியிருந்தால் நாங்கள் அதனை ஏற்றுக் கோல்வோம்”, என்றார் அவர்.

நபிகள் நாயகம் மீதான தமது டிவிட்டர் பதிவுகளைத் தொடர்ந்து சவூதி அரேபியாவிலிருந்து வெளியேறி மலேசியாவுக்கு வந்த ஹம்சாவை நேற்று அரசாங்கம் திருப்பி அனுப்பியது.

தமது சொந்த நாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கக் கூடிய சாத்தியமுள்ள ஹம்சாவை திருப்பி அனுப்பியதின் மூலம் அரசாங்கம் மனித உரிமைக் கோட்பாடுகளை மீறி விட்டதாக உள்நாட்டு அரசு சாரா அமைப்புக்களும் சைவில் சமூக அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்துள்ளன.