“மிதவாத மலேசியா” என்ற கூற்றைக் கேலிசெய்யும் செயல், சார்ல்ஸ் சந்தியாகு

எம்பி பேசுகிறார்: தண்டனையிலிருந்து தப்பிக்க தம் நாட்டைவிட்டுத் தப்பியோடி வந்த ஒரு சவூதி அராபியரைப் பிடித்து அவரது நாட்டுக்கு – கொலைக்களத்து என்றுகூட சொல்லலாம் –  திருப்பி அனுப்பி வைத்ததன்வழி அவரது நம்பிக்கையை நாசமாக்கிவிட்டது மலேசிய அரசாங்கம்.

23வயது பத்தி எழுத்தாளரான ஹம்சா காஷ்ஹாரி, நியு சிலாந்து செல்லும் வழியில்  மலேசியா வந்தார். இங்கு அவர், பன்னாட்டு போலீஸ் அமைப்பான இண்டர்போல் கேட்டுக்கொண்டதற்கிணங்க  தடுத்து வைக்கப்பட்டார்.

சவூதி மன்னர் காஷ்ஹாரியை நீதியின்முன் நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதும் சவூதி அராபிய சமய அறிஞர்கள், நபிகள் நாயகம் குறித்து டிவிட்டரில் சமயவிரோத கருத்துத் தெரிவித்ததற்காக காஷ்ஹாரியைத் தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருப்பதும் இண்டர்போலுக்கு நன்கு தெரியும்.

சமயவிரோத கருத்துத் தெரிவிப்பது சவூதி அராபியாவில் கொலைத் தண்டனைக்குரிய குற்றமாகும்.

முதலாவதாக, இண்டர்போல் அடிப்படை மனித உரிமையைக் காக்கும் அதன் கடப்பாட்டை மீறி, ஆஷ்ஹாரியைக் கோலாலம்பூரில் கைது செய்ய ஏற்பாடு செய்தது.

காஷ்ஹாரி சமயவிரோதக் கருத்துகளைத் தெரிவித்தாரா இல்லையா என்ற வாதத்துக்குள் நாம் நுழைய வேண்டாம். ஆனால், மலேசிய அரசாங்கம் அவசரப்பட்டுச் செயல்பட்டதை மறுக்கவியலாது.

மலேசியாவுக்கும் சவூதி அராபியாக்குமிடையில் குற்றவாளிகளை ஒப்படைக்க வகை செய்யும் முறையான ஒப்பந்தம் எதுவும் கிடையாது. அதனால், காஷ்ஹாரியை அவரது தலைதுண்டிக்கப்பட வேண்டும் என்று கோருவோரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை. 

சட்டத்துக்கு மாறான செயல் 

இரண்டாவதாக, காஷ்ஹாரி திருப்பி அனுப்பப்பட்டதும் சட்டவிரோத செயலாகும். அதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவு ஒன்றை காஷ்ஹாரியின் வழக்குரைஞர் முகம்மட் அபிக் முகம்மட் நோர் பெற்றிருந்தார்.

காஷ்ஹாரி தப்பியோடி வந்த நோக்கமே அரசியல் புகலிடம் தேடித்தான் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி யோசிக்கும்போது அரசியல் புகலிடம் தேடி வந்த அவரைச்  சந்திக்க ஐநாவுக்கான அகதிகள் உயர் ஆணைய அதிகாரிகள் ஏன்  அனுமதிக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. இது, அப்பட்டமான மனித உரிமைமீறலாகிறது.

இதற்குமுன்பு, மலேசிய ஜும்மா இஸ்லாமியா அமைப்பின் உறுப்பினர்களை இந்தோனேசிய அதிகாரிகள் சுட்டுக்கொன்றபோது அவர்களைக் கொன்றிருக்க வேண்டியதில்லை மலேசியா மிதவாத முஸ்லிம் நாடு என்பதால் அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்தியிருக்கலாம் என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறியிருந்தார்.

ஆனால்,காஷ்ஹாரியை பிடித்து சவூதி அராபியாவிடம் ஒப்படைத்ததில் மிதவாதம் தெரியவில்லை.

அதற்கு எதிரான ஒரு செயலைத்தான் மலேசியா செய்துள்ளது.மனித உரிமைகளைக் கொஞ்சமும் மதிக்காமல் ஓர் இளைஞரை  –  அவரை சாவுக்கு வழி அனுப்பிவைப்பதுபோல் – அவரது நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

காஷ்ஹாரி கொலைத்தண்டனைக்கு ஆளானால் மலேசியாதான் அதற்குக் காரணமாக இருக்கும்.

=========================================================================================

சார்ல்ஸ் சந்தியாகு: டிஏபி-யைச் சேர்ந்த கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்