யோசனை தெரிவிக்கப்பட்டுள்ள ஒரே பராமரிப்புத் திட்டம் சில நன்மைகளைக் கொண்டிருந்தாலும் வரி வசூலிப்பு மூலம் அதற்காக உருவாக்கப்படும் பில்லியன் கணக்கான ரிங்கிட் நிதிகள் மீது அரசாங்கத்தை வரி செலுத்துவோர் நம்ப முடியாமல் இருப்பதாக சுகாதாரத் துறைக்குப் பொறுப்பான சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறுகிறார்.
அரசாங்கம் ஏற்கனவே தனது குறைந்த விலை வீடமைப்புத் திட்டத்துக்காக இபிஎப் என்ற ஊழியர் சேம நிதியிலிருந்து 1.5 பில்லியன் ரிங்கிட்டை எடுக்க முடிவு செய்துள்ளது. ஒரே பராமரிப்புத் திட்டத்திலும் அது அவ்வாறு செய்யாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
“அந்த நிதி எவ்வளவு பெரியதாக இருக்கும்? அது சில ஆண்டுகளில் இபிஎப்-க்கு இணையாக திகழும். காரணம் ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான ரிங்கிட் அதற்குச் செல்கிறது,” என அவர் நேற்று பெட்டாலிங் ஜெயாவில் ஒரே பராமரிப்புத் திட்டம் மீது நடத்தப்பட்ட கருத்தரங்கில் கூறினார்.
அந்த ஒரே பராமரிப்புத் திட்டத்தின் கீழ் சமூக சுகாதார காப்புறுதித் திட்டத்துக்காக முதலாளிகளிடமும் ஊழியர்களிடமும் வரி வசூலிக்கப்படும். அதிலிருந்து விலகிக் கொள்வதற்கு எந்தத் தேர்வும் கொடுக்கப்பட மாட்டது. அரசாங்கமும் அந்த நிதிக்கு பணம் கொடுக்கும்.
தனியார் மயம் தொடர்பில் நாட்டின் அடைவு நிலை நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. அதனால் ஒரே பராமரிப்புத் திட்டம் சுகாதாரச் செலவுகளைக் குறைக்கும் என நம்ப முடியாது என்றும் ஜெயகுமார் சொன்னார்.
“நண்பர்களுக்கு உதவும் போக்கினால் தனியார் மயம் என்பது “கொள்ளையாக” மாறி விடுகிறது. எடுத்துக் காட்டுக்கு ஐந்து சென் மதிப்புள்ள ஒரு மாத்திரையை தனியார் நிறுவனங்கள் அரசாங்க மருத்துவமனைகளுக்கு 25 சென் -னுக்கு விற்கின்றன. அந்த நிறுவனங்கள் அரசாங்கத்துடன் 15 ஆண்டு கால ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன.
“நீங்கள் உண்மையிலேயே சுகாதார கவனிப்பு முறையில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்பினால் நாங்கள் அதனை வரவேற்கிறோம். ஆனால் நீங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புக்களுடனும் பேச்சு நடத்த வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்.”
அந்த ஒரே பராமரிப்புத் திட்டம் மிக ரகசியமாக இருப்பதாக பலர் குறை கூறியுள்ளனர். அது இன்னும் குழந்தைப் பருவத்திலேயே இருப்பதாக சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் கூறியுள்ளார்.
2009ம் ஆண்டு அந்தத் திட்டம் மீது சுகாதார அமைச்சு ஒர் அறிக்கையைத் தயாரித்தது. அது குறித்தே பெரும்பாலும் விமர்சனம் செய்யப்படுகின்றது.