நஸ்ரி: ஷாரிசாட் குடும்பத்தினர் ரிம250மில்லியனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) திட்டத்தில் சம்பந்தப்பட்ட மகளிர், குடும்ப, சமூக மேம்ப்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலிலின் குடும்பத்தார் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ரிம250மில்லியன் கடனைத் திருப்பிக் கொடுத்திட வேண்டும். பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் இவ்வாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அவரது தொகுதியான பாடாங் ரெங்காசில் செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரி, இவ்விவகாரத்துக்கு இதுதான் சிறந்த தீர்வு, இதற்காக ஷரிசாட் பதவிவிலகத் தேவையில்லை என்றார்.

“ஷரிசாட் பதவி விலக வேண்டியதில்லை.அந்தப் பணத்தை அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுப்பதுதான் முக்கியம்”, என்று அவர் தெரிவித்ததாக சினார் ஹரியான் கூறியுள்ளது.

ஷரிசாட்டின் கணவர் முகம்மட் சாலே இஸ்மாயில் தலைவராக உள்ள என்எப்சி, அதற்கு எளிய நிபந்தனைகளில் கொடுக்கப்பட்ட கடனைக் கொண்டு பங்சாரில் இரண்டு சிங்கப்பூரில் மூன்று என ஆடம்பர கொண்டோமினியம்களையும் புத்ரா ஜெயாவில் நிலங்களையும் வாங்கியதாக பிகேஆர் குற்றம் சுமத்தியதை அடுத்து பலமுனைத் தாக்குதலை எதிர்நோக்கி வருகிறது.

மலேசியர்களுக்குத் தேவையான மாடுகளை விநியோகம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் அது.

இப்ப்போது போலீசும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையமும் என்எப்சி விவகாரத்தை விசாரணை செய்து வருகின்றன.

கடந்த புதன்கிழமை ஷரிசாட்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

TAGS: