சுங்கை சிப்புட் மஇகா, கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் அல்லது அவரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அங்கு போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
அந்தத் தொகுதியை பாரிசான் நேசனல் திரும்பவும் கைப்பற்ற அது கடுமையாக பாடுபடும் என்று அதன் தலைவர் ஆர்.கணேசன் கூறினார்.இப்போது அத்தொகுதி எம்பியாக இருப்பவர் பிஎஸ்எம்மின் டாக்டர் டி.ஜெயக்குமார். அவர், 2008 தேர்தலில் மஇகா தலைவர் ச.சாமிவேலுவைத் தோற்கடித்து அத்தொகுதியைக் கைப்பற்றினார்.
“13வது பொதுத் தேர்தலில் டத்தோ ஸ்ரீ (பழனிவேல்), சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதை வரவேற்கிறோம்.மஇகாவுக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தொகுதி.இங்கு தலைவர் போட்டியிடுவதற்குதான் முன்னுரிமை கொடுப்போம்.அவர் இங்குப் போட்டியிட வேறு யாரையும் தேர்ந்தெடுத்தாலும் அதையும் ஏற்று அவ்வேட்பாளரின் வெற்றிக்கும் கடுமையாக உழைப்போம்”, என்று செய்தியாளர்களிடம் கணேசன் கூறினார்.
பழனிவேல் அங்கு போட்டியிடுவதை மஇகா மட்டுமல்லாமல் அம்னோ, மசிசா, பிபிபி ஆகியவையும் வரவேற்கின்றன. ஐபிஎப், மக்கள் சக்தி ஆகியவையும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அத்தொகுதியை அம்னோவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பகுதி முன்னாள் தலைவர் கே.மணிமாறன் தமிழ் நாளேடு ஒன்றில் இன்று அறிக்கை வெளியிட்டிருப்பதை கணேசன் கண்டித்தார்.
அம்னோவோ வேறு எந்த பிஎன் கட்சியுமோ அந்தத் தொகுதியைக் கொடுக்குமாறு கேட்கவில்லை என்கிற நிலையில் இப்படி அறிக்கை விடுப்பது பிஎன்னின் நிலவும் இணக்கநிலையைக் கெடுத்துவிடும் என்றாரவர்.
பழனிவேல் அண்மையில்,இதுவரை எஸ்.வீரசிங்கம் வகித்து வந்த பேரா மஇகா தலைவர் பொறுப்பை ஏற்றது அம்மாநிலத்தில் அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன்னர் மஇகாவை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் வரை சுங்கை சிப்புட்டில் இந்திய வாக்காளர் எண்ணிக்கை 11,066 என்றும் இப்போது அங்கு மஇகாவுக்கு 7,500 உறுப்பினர்கள் இருப்பதாகவும் கணேசன் கூறினார்.
புதிதாக 23 கிளைகள் திறக்க சுங்கை சிப்புட் மஇகா விண்ணப்பம் செய்திருக்கிறது. இது, அங்கு அக்கட்சிக்கும் பிஎன்னுக்கும் ஆதரவு பெருகி வருவதைக் காண்பிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
-பெர்னாமா